இராகவன் கருப்பையா- ‘உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்’ என தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அரைகூவல் விடுத்திருந்தது நம் அனைவருக்குமே தெரியும்.
கோறனி நச்சிலின் தற்போதைய வீரியத்தை சமாளிப்பதற்கு மருந்து வகைகள், படுக்கைகள் மற்றும் பிராணவாயு, முதலியவை அதிக அளவில் தேவைப்படுவதால் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாய் தமிழகத்தை மறக்காமல் ஈகையும், இரக்கமும், கருணையும், பரந்த உள்ளமும் கொண்டு தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் இக்கொடிய நோய்க்கு எதிராக தற்போது கடுமையாக போராடிவருவது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
மனிதாபிமானம் படைத்த அனைவருமே வருத்தப்படும் அளவுக்கு அங்கு நிலைமை சற்று மோசமாகத்தான் உள்ளது.
எனினும் தமிழகத்திற்கு உதவக் கூடிய நிலையில் நாம் இப்போது இருக்கிறோமா என்பதுவே தற்போதைய கேள்விக்குறி.
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர், கணடிய இந்தியர்கள், மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் பொருளாதார வலிமையோடு மலேசிய இந்தியர்களின் நிலையை ஒப்பிட முடியாது.
எனவே ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனும் அதன் துணைத்தலைவர் சரவணனும் நம் சமூகத்தினரிடம் நிதியுதவி கோருவதுதான் வியப்பாக உள்ளது.
நமது தொப்புள் கொடி உறவுகள் கொண்ட தமிழ் நாடு கடினமான நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்ட அவ்விருவரையும் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பொது மக்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மலேசிய இந்தியர்கள், குறிப்பாக பி40 தரப்பினர் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து எவ்வாரான இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என இவர்களுக்குத் தெரியாதா என நம் சமூகத்தினர் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதை நம்மால் காண முடிகிறது.
வேலையிழந்து அன்றாட உணவுக்குக் கூட வழியின்றி பல குடும்பங்கள் பரிதவிப்பதையும் அவ்வப்போது நாம் செய்திகளில் காண்கிறோம்.
இந்த காலக்கட்டத்தில் மெய்நிகர் வாயிலாக கல்வி கற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள மாணவர்களில் நிறைய பேர், குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கணினி அல்லது குறைந்த பட்சம் ‘டேப்லட்’ எனப்படும் வரைப்பட்டிகை கூட இல்லாமல் அவதிப்படுவதும் உண்மைதான்.
நூற்றுக்கணக்கான உயர்கல்வி மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர இயலாமல் தல்லாடுகின்றனர்.
இவர்களுக்கெல்லாம் உதவி செய்யும் பொருட்டு நிதி சேகரிக்க ஒரு நாதியும் இல்லை என புலனக்குழுக்களில் மானாவாரியாக பல அன்பர்கள் திட்டி தீர்க்கிறார்கள்.
நமது சமூகத்தினரின் நிலைமை இவ்வாறு இருக்க, ‘தனக்கு மிஞ்சியதுதானே தானம்’, என விக்னேஸ்வரனுக்கும் சரவணனுக்கும் தெரியாமல் போய்விட்டதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
மொத்தம் 78 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் இல்லாத பணக்காரர்களா 2 இலட்சம் மலேசிய இந்தியர்களில் இருக்கிறார்கள் என மக்கள் கேள்வி கேட்பதும் நியாயமாகவே உள்ளது.
அது மட்டுமின்றி ஸ்டாலினின் குடும்பம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று என்றும் நம்பப்படுகிறது.
உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் 28 மாநிலங்களில், மொத்தம் 270 பில்லியன் அமெரிக்க டாலரை சொத்தாகக் கொண்டுள்ள தமிழகம் 2ஆவது பணக்கார மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது தகுதிக்கு ஏற்ப எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களைப் பொருத்த வரையில் அது வெரும் தூசிதான்.
நிதியுதவி வழங்க விரும்புவோர் ம.இ.கா. தலைமையகத்தையோ தங்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என விக்னேஸ்வரனும் சரவணனும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.