மலேசியாகினி செய்தித் தளம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் குறித்து விளக்கமளிக்க, போலீசார் இன்று இரண்டு மலேசியாகினி பத்திரிகையாளர்களை அழைத்தனர்.
பிப்ரவரி மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த ஏ கணபதி, 40, தொடர்பானவை அந்த மூன்று கட்டுரைகளும்.
மலேசியாகினி துணை ஆசிரியர்கள் ருஸ்னிஸாம் மஹாத் மற்றும் எய்டி அஸ்ரி அப்துல்லா ஆகியோர் கோலாலம்பூர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.
மலேசியாகினி பத்திரிகையாளர் பி நந்தகுமார் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கோவிட் -19 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள முடியவில்லை.
புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (யு.எஸ்.ஜே.தி.) இன்ஸ்பெக்டர் ஷாரிர் மொஹமட் மற்றும் இன்ஸ்பெக்டர் மொஹமட் நசீர் அபு ஹசான் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் விளக்கப் பதிவைச் செய்தனர்.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், பொது தேசத் துரோகத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி)-இன் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என அறியப்படுகிறது.
“வழக்குரைஞர் : கணபதி கால், தோள்பட்டையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்தார் எனப் பிரேதப் பரிசோதனை கூறுகிறது”, “கணபதியின் மரணம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் – ம.இ.கா.” மற்றும் “போலிசாரால் தாக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக ஐ.சி.யு.-வில் இருந்தவர் இறந்தார்” என்பனவே அந்த மூன்று கட்டுரைகள் ஆகும்.
கணபதியின் மரணம் குறித்து விசாரிக்கும் ஒரு விசாரணை அதிகாரியால், அந்த போலிஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மலேசியாகினி -க்கு தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 11-ம் தேதி, இறந்தவரின் தாயார், எஸ். தனலட்சுமி, 60, தனது மகன் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பாக கோம்பாக் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.
மலேசியாகினி பார்த்த அறிக்கையின்படி, தனலட்சுமி தனது மகன் பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
மார்ச் 8-ம் தேதி, ஒரு போலீஸ்காரர் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார், அவர் தனது மகன் விடுதலை செய்யப்பட்டு செலாயாங் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
கணபதி ஏப்ரல் 18-ம் தேதி மருத்துவமனையில் காலமானார்.
ஏப்ரல் 30-ம் தேதி, கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மாஜிஸ்திரேட் அல்லது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவ அதிகாரியிடம் கணபதி ஒருபோதும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் அளிக்கவில்லை என்று கூறினார்.
இருப்பினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், விசாரணை ஆவணங்கள் துணை அரசு வக்கீல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அரிஃபாய் கூறினார்.