ஏப்ரல் 30-ம் தேதி, நடைபெற்ற ‘புகா புவாசா புகா பார்லிமென்’ எதிர்ப்பு பேரணி தொடர்பாக விசாரிக்க, போலீசார் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளனர்.
மே 20-ஆம் தேதி, மதியம் 1 மணிக்குப் புக்கிட் அமானில் தன்னோடு சேர்த்து மேலும் 6 பேருடன் விசாரிக்கப்படுவார் என்று மூடா சார்பு பொதுச்செயலாளர் அமீர் அப்துல் ஹாடி தெரிவித்தார்.
“பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதிர் தொலைபேசியில் தனது வாக்குமூலத்தை கொடுத்துவிட்டார்.
“அவர் புக்கிட் அமான் வர மாட்டார்,” என்று அமீர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாலோ சட்டமன்ற உறுப்பினர், ஷேக் உமர் அலி பாகரிப், கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர், லிம் இ வெய், பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரன்ராஜ், அமானா கூட்டரசுப் பிரதேச இளைஞர் தலைவர் அஸ்மலிஃப் அப்துல் ஆடம், கூட்டரசு பிரதேசப் பெஜுவாங் தலைவர் கைருட்டின் அபு ஹசாசன் மற்றும் வாக்கு-18 இணை நிறுவனர் தர்மா பிள்ளை ஆகியோர் மற்ற அந்த ஐவர் ஆவர்.
முன்னதாக, அமைதிச் சட்டம் 2012 பிரிவு 9(5)-இன் கீழ், போராட்டக்காரர்கள் விசாரிக்கப்படுவதாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் மொஹமட் ஸைனால் அப்துல்லா கூறியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அமைதி காக்கும் காவல்துறை குழுவை வழிநடத்திய உதவி கண்காணிப்பாளர் அஹ்மத் ஜைனல் துவான் இஸ்மாயில் அளித்த புகாரை அடுத்து இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் “புகா புவாசா புகா பார்லிமென்” பேரணி நடைபெற்றது.