சபாவுக்குள் நுழைபவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்

கோவிட் -19 பரவலைத் தடுக்கும் முயற்சியாக, சபா அரசு நாளை முதல் மாநிலத்திற்குள் நுழையும் தனிநபர்கள் மீது 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவை அமல்படுத்தியுள்ளது என்று மாநில அரசு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மாசிடி மஞ்சுன் தெரிவித்தார்.

சபாவைச் சேர்ந்தவர்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் பணி அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாசிடி கூறினார்.

சபாவைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களாக நியமிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள், அதாவது கோத்தா கினாபாலுவில் 16 தங்கும் விடுதிகள் மற்றும் தவாவ்வில் ஒரு தங்கும் விடுதியில் தங்கள் சொந்த செலவில் தங்க வேண்டும்.

“கோவிட் -19 பி.சி.ஆர். (பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) சோதனையில் எதிர்மறையான முடிவு கொண்டவர் மட்டுமே சபாவிற்குள் நுழைய முடியும் என்பது கட்டாயமாகும்.

“உத்தியோகப்பூர்வக் கடிதம் வைத்திருக்கும் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே சபாவுக்குள் நுழைவது அனுமதிக்கப்படுகிறது,” என்றும் அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மாநிலத்தில் முதலீடு செய்யும் நோக்கத்தில் நுழையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்கிறது, இருப்பினும் அவர்கள் மாநில அரசிடமிருந்து சிறப்பு நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று மாசிடி கூறினார்.

இதற்கிடையில், சபா மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்.) கோவிட் -19 பரிமாற்றத்தின் இரண்டு சம்பவங்களைக் கண்டறிந்துள்ளது, இரண்டுமே தவாவ்’வில் நோன்புப் பெருநாள் கொண்டாடத் திரும்பிய லாபுவானைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்டது.

முதல் சம்பவத்தில், திருமணமான தம்பதியினர் மே 7-ஆம் தேதி தவாவ்வின் லாடாங் அபாக்காவுக்குத் திரும்பினர், மே 14-ஆம் தேதி அவர்களுக்கு சோதனை முடிவுகள் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டு, மேலும் ஒன்பது குடும்ப உறுப்பினர்களைப் பாதித்தனர்.

இரண்டாவது சம்பவத்தில், தனிநபர் ஒருவர் மே 16-ம் தேதி தவாவ், கம்போங் சுங்கை இமாமுக்குத் திரும்பினார், மே 16-ம் தேதி அவரின் சோதனை முடிவுகள் நேர்மறையாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தவாவ் தாமான் பார்க்லியில் உள்ள அவரது குடும்பத்தினரைச் சந்தித்த அவரால், அவரின் குடும்பத்தினர் 43 பேருக்கும் தொற்று பரவியது.

“எனவே, சபாவுக்குள் நுழைபவர்களுக்கு இறுக்கமான எஸ்ஓபி-யைப் பின்பற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஜே.கே.என்.எஸ். இன்று 95 புதியக் கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 59,504-ஆக உயர்ந்துள்ளது என்று மாசிடி சொன்னார்.

-பெர்னாமா