மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி) அல்லது முழு இயல்நிலை முடக்கத்தை அமல்படுத்த சிலாங்கூர் மாநில அரசு உடன்படவில்லை.
சிலாங்கூர் கோவிட் -19 பணிக்குழுத் தலைவர் டாக்டர் சுல்கெஃப்ளி அஹ்மத் கூறுகையில், இந்தத் திட்டம் வீட்டு பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, பல தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும்.
“பி.கே.பி.யை நிர்வகிக்க, முழு இயல்நிலை முடக்கத்தை ஒரு சுலபமான வழியாக நாம் மாற்ற கூடாது,” என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மக்கள் தரமான செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) முக்கியத்துவம் கொடுத்து இணங்க வேண்டும், குறிப்பாக கோவிட் -19 தொற்றின் புதிய மாறுபாடு பரவிவரும் இத்தருணத்தில் என அவர் விளக்கினார்.
இதற்கிடையில், சிலாங்கூர் பொது சுகாதாரம், ஒற்றுமை மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத், கோவிட் -19 பரவலைத் தடுக்க முழுமையான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நல்லது என்று கூறினார்.
சித்தி மரியாவின் கூற்றுப்படி, பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக வணிகம் அல்லது சுய வேலைவாய்ப்பை நம்பியிருப்பவர்களின் பொருளாதாரம்.
கோவிட் -19 நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானதாகி வருகிறது, இன்று நாடு 6,075 புதிய நேர்வுகளுடன் அதிக தினசரி நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.
அந்த எண்ணிக்கையில், சிலாங்கூர் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது 2,251 நேர்வுகளுடன் தினசரி அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.