தீபகற்பத்தில் உள்ள மாவட்டங்கள் எதுவும் பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்படவில்லை. நேற்றைய நிலவரப்படி பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா ஆகிய 3 மாநிலங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய 2 கூட்டரசுப் பிரதேசங்களும் கோவிட் -19 பரிமாற்றத்தின் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
மலேசிய சுகாதார அமைச்சு, தனது முகநூல் பக்கத்தில் இன்று பகிர்ந்த கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில், மே 5 முதல் நேற்று வரை 14 நாட்களில், மலேசியாவில் நேர்மறை தொற்றுகளின் எண்ணிக்கை 57,089 ஆகும்.
மலேசியாவில் இன்றுவரை நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை 485,496 எனப் பதிவாகியுள்ளது.
“தீபகற்பத்தில் எட்டு மாவட்டங்கள், லங்காவி, கம்பார், ஜெலெபு, கோல பிலா, ரொம்பின், பெரா, லிப்பிஸ் மற்றும் மாராங் ஆகியவை ஆரஞ்சு அந்தஸ்தைக் கொண்டுள்ள நிலையில், மஞ்சள் அந்தஸ்துள்ள மாவட்டங்களாக கங்கார், பேராக் தெங்கா, மெர்சிங், கேமரன் மலை, மாரான், உலு திரெங்கானு, கெமாமான், குவா மூசாங், பாடாங் தெராப் மற்றும் சிக் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன,” என்றார் கே.கே.எம்.
சபாவில், தம்புனான், கூடாட், நபாவான், பிடாஸ், கோலா பென்ஞு, தொங்கோட், தெலுபிட் மற்றும் பெலூரான் ஆகிய எட்டு மாவட்டங்கள் பசுமை மண்டலங்களைக் கொண்டுள்ளன.
இதற்கிடையில், சரவாக்கில், சிமுஞ்சன், அசாஜயா, கபோங், மாருடி மற்றும் தெலாங் உசான் ஆகியவைப் பசுமை மண்டலப் பிரிவுகளாக உள்ளன.
பசுமை நிலை மாவட்டங்களில் சுழிய நேர்வுகள், மஞ்சள் (1–20 நேர்வுகள்), ஆரஞ்சு (21–40 நேர்வுகள்) மற்றும் சிவப்பு 41 அல்லது அதற்கு மேற்பட்ட நேர்வுகள் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா