முழு பி.கே.பி. : பிரதமரும் அமைச்சர்களும் கூட்டாகப் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும்

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்த அரசாங்கம் உண்மையிலேயே விரும்பினால், பிரதமர் முஹைதீன் யாசின் முக்கிய அமைச்சர்களுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று பாங்கி எம்.பி. ஓங் கியான் மிங் கூறினார்.

கடந்த காலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டில் குழப்பம் என்று விவரிக்கப்பட்டு, பல யூ-டெர்ன்களுக்கு வழிவகுத்ததைத் தவிர்க்க, இதனைச் செய்ய வேண்டும் என்று ஓங் கூறினார்.

“ஓர் அமைச்சர் மற்றொரு அமைச்சருடன் தொடர்பு கொள்ளாமல், பத்திரிகையாளர் சந்திப்புக்களைத் தனிதனியாகச் செய்வதால், பின்னர் யூ-டெர்ன் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது, முந்தைய இச்சூழ்நிலையைத் தவிர்க்க இது உதவும்.

“கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நம்மை வெளியே கொண்டு வர, தேசியக் கூட்டணி நிர்வாகம் வல்லமை கொண்டது என்பதை மக்கள் நம்ப, முக்கிய அமைச்சர்கள் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், முஹைதீனுடன், சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின், சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் அஸ்மின் அலி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் மற்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில், மோசமான தொற்றுநோயைத் தொடர்ந்து அரசாங்கம் பி.கே.பி.யை இன்னும் கடுமையாக செயல்படுத்தக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன.

நேற்று, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தினசரி நேர்வுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், இவ்வாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் பதிவாகியிருப்பதால், அம்மாநிலத்தில் முழு பி.கே.பி. செயல்படுத்த வேண்டியிருக்கலாம் என்று ஆதாம் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த பி.கே.பி. 3.0-ஐ செயல்படுத்துவதில் சில குழப்பங்கள் இருந்தன, வெளிப்புற ஓய்வு நடவடிக்கைகள் தொடர்பாக எஸ்ஓபி மாற்றங்கள் உட்பட.

எடுக்கப்படும் முடிவுகளில் மாற்றங்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்கவும், அரசாங்கத்திடமிருந்து நேரடி பதில்களைப் பெறவும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக இது அமையும் எனவும் ஓங் கூறினார்.