எரிந்த ஒராங் அஸ்லி வீட்டின் வீடியோ, புதிய நில அபகரிப்பு முயற்சியைக் குறிக்கிறது – ஆர்வலர்கள்

மார்ட்டின் வெங்கடேசன் | ஒராங் அஸ்லி செமலை பெண் ஒருவர், தனது தாத்தாவின் எரிந்த தோட்ட வீட்டைப் பார்க்கும் காணொளி, சமீப காலமாக அச்சமூகம் நில அபகரிப்பு முயற்சிக்கு ஆளாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும் என்று ஒராங் அஸ்லி அக்கறை மையத்தின் (Centre for Orang Asli Concerns) இயக்குநர் கொலின் நிக்கோலஸ் தெரிவித்தார்.

மே 12-ம் தேதி, பஹாங், பெராவில் உள்ள கம்போங் பாயா பெரங்கானில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு செமலை பெண் தனது தாத்தாவின் வீடு சிறிய கட்டிடங்கள் மற்றும் பிற பழ மரங்களுடன் அழிக்கப்பட்ட துன்பகரமான தருணத்தை விவரித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் போலிஸில் புகார் செய்துள்ளனர், ஆனால் இந்த சம்பவம், 67.7 ஹெக்டர் பரப்பளவில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்ட நடவடிக்கை என்று நிக்கோலஸ் நம்புகிறார்.

“2003-ஆம் ஆண்டு முதல், தனிநபர்கள் பலர் வந்து, அங்குள்ள ஏராளமான தனியார் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளனர்.

“தற்போது, ​​ஆர்.டி.கே. ஜெராம் என்ற குழு நிலத் திட்டம் (ஆர்.டி.கே.) அங்கு உள்ளது.

“தெமர்லோ மாவட்டத்தில் உள்ள, கம்போங் ஜெராம் மற்றும் கம்போங் டுரியான் தாவர் மலாய் கிராமங்களில் இருக்கும் மக்களை ஈடுபடுத்தும் திட்டமாக அது உள்ளது. இப்போது இது மலாய் இருப்பு (ரிசர்வ்) நிலம் என்றும் கூறப்படுகிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நிக்கோலஸின் கூற்றுப்படி, அவர் 2006-ஆம் ஆண்டில், முதன்முதலில் இப்பகுதிக்கு வந்தார். அந்த நேரத்தில் செமலை மக்கள், சுமார் 200 குடியிருப்பாளர்களைக் கொண்ட கம்போங் பாயா பெரங்கான் மற்றும் கம்போங் பாயா பாடாக் அருகே உள்ள ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபட்டனர்.

1927-ஆம் ஆண்டு முதல், மலாய் இருப்பு நிலம் என்று கூறி, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலாய்க்காரர்களின் ஃபெல்க்ராவுக்கான நிலத்தை அபிவிருத்தி செய்ய மாநில அரசு விரும்பியபோதும், ​​பெரா நகரில் உள்ள கம்போங் புக்கிட் ரோக் மற்றும் கம்புங் இபாமிலும் இதேதான் நடந்தது.

பாதின் மொஹமட் நோஹிங், மற்றவர்களுடன் சேர்ந்து அந்த வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.

“1927-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஒரு விரிவான அறிவிப்பை (broad declaration) வெளியிட்டது, பஹாங் ஆற்றின் குறுக்கே 270 மைல்களுக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் 3 மைல் அளவிற்கு மலாய் இருப்பு நிலம். அவர்கள் அங்கு வசிக்கும் ஒராங் அஸ்லி உட்பட மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் இதை கண்மூடித்தனமாகச் செய்கிறார்கள்.

“எனவே, 1927-ஆம் ஆண்டில், மலாய் இருப்பு நிலத்தைப் பிரிட்டிஸ் உருவாக்கியது, பழங்குடி மக்களின், அவர்கள் மூதாதையர் நிலங்களுக்கானப் பூர்வீகச் சொத்து உரிமைகளை அழிக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது, அதேக் கொள்கை இங்கேயும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

செமலை கிராமவாசிகளுக்கு விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும், 1948 முதல் தாங்கள் ஆக்கிரமித்து வரும் நிலத்திற்குத் தீர்வுகாண மாநில அரசிடம் விண்ணப்பம் செய்து வருவதாகவும் சாரி சப்பார் பழங்குடித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில், கம்பாங் ஓராங் அஸ்லி லுபுக் பெராவில் உள்ள நிலத்திற்கு நில உரிமை கோரும் செமலை கிராமவாசிகள், எண்ணெய் பனை சாகுபடிக்கு நிலத்தை அகற்றும் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வழிவிடுமாறு உத்தரவிடப்பட்டனர்.

அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.