ஜொகூர் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வேண்டும் – ஜொகூர் சுல்தான்

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், கோவிட் -19 பரவல் குறித்தும், மாநில மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்தும் விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்து, கலந்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் அனைத்து ஜொகூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் சொன்னார்.

“இந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அமர்வுகள் நடைபெறுவதைத் தடுக்கும் அவசரக்காலக் கட்டளை பற்றி நான் அறிவேன். இருப்பினும், ஜொகூரில், தொற்றுநோய் பாதிப்பில் இருக்கும் மக்களுக்குத் தங்கள் சேவைகளைத் தொடர்ந்து வழங்க எம்.பி.க்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அணிதிரட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்..

“எனவே, ஜொகூரில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு கூட்டத்தை நடத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

“இந்தக் கலந்துரையாடலின் மூலம், அனைத்து எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும், ஜொகூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்துகொள்ள முடியும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜொகூரில், ஜனவரி மாதத்தில் அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்ட கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பொதுவாக கட்டுப்பாட்டில் இருந்தது.

இருப்பினும், இந்த மாதத்தில் மாநிலத்தில் புதிய நேர்வுகள் அதிகரித்துள்ளன. நேற்று மொத்தம் 699 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம், பினாங்கு மந்திரி பெசார் சோவ் கோன் இயோ அவரது தலைமையில் பினாங்கு மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு விவாத அமர்வை நடத்தினர். இதில் தேசிய முன்னணி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர், ஆனால் தேசியக் கூட்டணி பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.