கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற “புகா புவாசா புகா பார்லிமென்” பேரணி தொடர்பில் சாட்சியமளிக்க, எட்டு பேர் இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகம் (ஐபிடி) சென்றனர்.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களான அவர்கள் அமைதி ஒன்றுகூடல் சட்டம் 2012, பிரிவு 9 (5)-இன் கீழ் விசாரிக்கப்பட்டனர்.
மதியம் 1 மணியளவில், ஐபிடியில் நுழைந்து அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியேறினர்.
இன்று வருகை அளித்தவர்களில் பெஜுவாங் தலைவர், முக்ரிஸ் மகாதீர்; பாலோ சட்டமன்ற உறுப்பினர், ஷேக் உமர் அலி பாகரிப்; கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர், லிம் இ வெய்; மூடா பொதுச்செயலாளர், அமீர் அப்துல் ஹாடி; பிஎஸ்எம் செயற்குழு உறுப்பினர் ஷரன் ராஜ்; கூட்டரசுப் பிரதேச அமானா இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்மலிஃப் அப்துல் ஆடம்; கூட்டரசுப் பிரதேசப் பெஜுவாங் தலைவர் கைருட்டின் அபு ஹசான்; மற்றும் வாக்கு18 இணை நிறுவனர் தர்மா பிள்ளை ஆகியோர் அடங்குவர்.
வாக்குமூலம் எடுக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்களின் வழக்கறிஞர் ஷாரெட்ஸான் ஜோஹன், அழைக்கப்பட்ட எட்டு பேரும் போலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள் என்றார்.
எவ்வாறாயினும், கொள்கையளவில், சம்பந்தப்பட்ட வாக்குமூலம் பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவை மத்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை மட்டுமே பயன்படுத்தின.
“அவர்கள் மத்திய அரசியலமைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தினார்கள்,” என்று அவர் கூறினார்.
கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு பேரணியில், அரசாங்கம் ஆறு விஷயங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரி மக்கள் ஒற்றுமை செயலகம் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்ச்சியில், சுமார் 100 பேர் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்னால் தங்கள் நோன்பைத் திறந்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கைகளில் அடங்கும்.
நோன்புத் திறத்தல் தவிர, பங்கேற்பாளர்கள் பேரணியின் போது மக்ரிப் தொழுகையுடன், அடக்குமுறை அரசாங்கத்துடன் தொடர்புடைய குர்ஆனிய வசனங்களை ஓதினர்.
இது தவிர, நேற்று கோவிட் -19 தினசரி நேர்வுகள் 6,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், தேசியக் கூட்டணி அரசாங்கம் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக முக்ரிஸ் கூறினார்.
“அன்றைய தினம், நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பதற்கான அழைப்பை ஆதரித்ததால் நானும் கலந்துகொண்டேன், ஏனெனில் தேசியக் கூட்டணி அரசாங்கம் கோவிட் -19 தொற்றைக் கையாளத் தவறிவிட்டது.
கோவிட் -19 பரவலைத் தடுப்பதில், அவசரநிலை அறிவிப்பு வெற்றிபெறவில்லை என்பதை நாம் காணலாம்.
“எனவே, நாடாளுமன்றம் புத்துயிர் பெற வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம், அங்கு எடுக்கப்படும் அரசாங்கத்தின் எந்த முடிவும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைவதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.
“டாங் வாங்கி ஐபிடி-யில் உள்ள விசாரணை அதிகாரிக்கு நான் இப்போது அளித்த தகவல் இதுதான்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வந்த இந்த அவசரநிலை, ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவடைய உள்ளது. அந்தக் காலகட்டத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன.