‘என்னை அவமதிப்பவர்களை அடிக்க சொன்னதில்லை’ – ம.இ.கா. தேசியத் தலைவர்

தனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பேசியவர்களை அடிக்க, தான் யாருக்கும் உத்தரவிடவில்லை என்று மஇகா தேசியத் தலைவர் ஏ விக்னேஸ்வரன் கூறினார்.

தனக்கு எதிராக தவறான வார்த்தைகளை வெளியிட்டவர், ஏற்கனவே அவரிடம் மன்னிப்பு கூறிவிட்டதாக, ஒரு போலிஸ் அறிக்கையில் அவர் சொன்னார்.

மலேசியாகினி பார்த்த போலிஸ் அறிக்கையின்படி, வீடியோவில் ஒருவரைத் தாக்கும் இளைஞர் குழு ஒன்று, அவரது பெயரையும் ம.இ.கா. துணைத் தலைவர் எஸ் சரவணனின் பெயரையும் மேற்கோள் காட்டியது கண்டு அதிர்ச்சியடைந்ததாக விக்னேஸ்வரன் கூறினார்.

“தாக்கப்பட்டவர் எனக்குத் தெரிந்தவர்தான் என்று நான் கூற விரும்புகிறேன், நான்கு நாட்களுக்கு முன்பு, அவர் பேசியத் தவறான வார்த்தைகளுக்காக என்னிடமும் சரவணனிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.

“ஆனாலும், அவர் அந்த வீடியோவில், எனது பெயரையும் எஸ் சரவணன் பெயரையும் பயன்படுத்தி தாக்கப்பட்டார், இது எங்கள் அறிவுறுத்தல்களின் பேரில் அவர் தாக்கப்பட்டார் என்ற எண்ணத்தைத் தருகிறார்.

“நாங்கள் அல்லது ம.இ.கா. கட்சி இதுபோன்ற எந்தவொரு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறது என்று கூறப்படுவதை நான் மறுக்க விரும்புகிறேன், இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரிக்க வேண்டுமென காவல்துறையை நான்  கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் அந்தப் போலீஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த அறிக்கையை, ம.இ.கா. தலைவர் டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் நேற்று வெளியிட்டார்.