கெடாவில், தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, மீள்வார்கள் என்ற நம்பிக்கையில்லாத நோயாளிகள் இனி ஐசியுவில் வைக்கப்பட மாட்டார்கள்.
இந்நிலை கோவிட் -19 நோயாளிகளையும், கோவிட்-19 அல்லாத நோயாளிகளையும் பாதிக்கிறது என்று பெரித்த ஹரியான் செய்திகள் கூறுகிறது.
தற்போது போதுமான ஐ.சி.யு. படுக்கைகள் இருந்தாலும், கோவிட் -19 நோயாளிகள் நிறைந்த ஐ.சி.யு.வில் மற்ற முக்கியமான நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்று கவலைப்படுவதாகக், கெடா சுகாதாரத் துறை ஆட்சிக்குழுத் தலைவர் டாக்டர் மொஹமட் ஹயாத்தி ஓத்மான் கூறியதாக அச்செய்தி மேற்கோளிட்டுள்ளது.
ஐ.சி.யு.வில் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டிய மோசமான நோயாளிகளுக்கும் கோவிட் -19 நோயாளிகளுக்கும் இடையில் தேர்ந்தெடுப்பதில் மருத்துவ ஊழியர்கள் மிகவும் கடுமையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கினார்.
“இந்தச் சூழ்நிலையைத் தெரிவிப்பதா, இல்லையா என எனக்கு தடுமாற்றமாக உள்ளது, ஆனால் சொல்லிதான் ஆக வேண்டும். சில சமயங்களில் ஐ.சி.யு.விற்கு யாரை அனுப்புவது என்பதை மருத்துவர் தேர்வு செய்ய வேண்டியுள்ளது, நோயாளி மிகவும் நாள்பட்ட மற்றும் குணமடைவார் என்ற நம்பிக்கையற்றவராக இருந்தால், நாங்கள் அவரை ஐ.சி.யுவில் வைக்க மாட்டோம்.
“இதில் கோவிட் -19 தொற்று இல்லாத நோயாளிகளும் அடங்குவர், மருத்துவர்கள் மிகவும் கடுமையான பரிசோதனைகளைச் செய்வார்கள், இருப்பினும் அனைத்து நோயாளிகளும் குணமடையும் வரை நாங்கள் அவர்களுக்குச் சிகிச்சையளிப்போம்,” என்று அவர் கூறினார்.
எஸ்ஓபி-க்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ஹயாத்தி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
“மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகளோடு, சிகிச்சையும் அறுவை சிகிச்சையும் தேவைப்படும் மற்றவர்களும் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் முதலில் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கெடாவில் நேற்று அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் (445) பதிவாகியுள்ளன, அம்மாநிலத்தின் ஐசியு வார்டுகள் 92 விழுக்காடு அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.