போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிவபாலன் மரணம்

கோம்பாக் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில் (ஐபிடி), விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மணி நேரத்தில், பாதுகாவலர் ஒருவர் இறந்து போனார்.

நேற்று காலை 11.20 மணியளவில் விசாரணைக்கு உதவ அழைத்துச் செல்லப்பட்ட சிவபாலன் சுப்பிரமணியம், 43, மதியம் 12.30 மணியளவில் இறந்து போனார்.

போலீசாரின் சம்பவ அறிக்கையில், அவர் மதியம் 12.30 மணிக்கு இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ள போதிலும், மாலை 3 மணியளவில் சிவபாலனின் சகோதரியை அழைத்த போலிசார், அவரது சகோதரர் செலாயாங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

2016-ல் நடந்த மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பில் விசாரிக்க, சிவபாலனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே காவல் நிலையத்தில், போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த, எ கணபதியின் சர்ச்சை தீர்வதற்குள், சிவபாலனின் மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி, காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட கணபதி, ஒரு மாதத்திற்கும் மேலாக செலாயாங் மருந்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஏப்ரல் 18-ம் தேதி மருத்துவமனையில் இறந்தார்.

சிவபாலனின் சகோதரி தனலட்சுமி, கோம்பாக் ஐபிடியிலிருந்து இன்று மதியம் 2.58 மணியளவில் தன்னை அழைத்து, தனது சகோதரர் செலாயாங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

“உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, அவரைப் பார்க்க அனுப்புங்கள்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

மாலை 4 மணியளவில், சிவபாலன் சுவாசக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக தனது தாயிடம் தெரிவித்த ஒரு போலீஸ்காரர், அவர்களைத் தடயவியல் துறைக்குச் செல்லும்படி கூறியதாக அவர் சொன்னார்.

“சிவபாலன் மதியம் 12.30 மணியளவில் இறந்துவிட்டார் என்று போலீஸ்காரர் என்னிடம் சொன்னதைத் தவிர, என் சகோதரருக்கு என்ன ஆனது என்பது எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கூறிய அவர், பிற்பகல் 3 மணியளவில் மட்டுமே காவல்துறையினர் அவர்களை அழைத்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிய கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே, “நாங்கள் இந்த விஷயத்தை விசாரிப்போம்,” என்று கூறினார்.

கணபதி வழக்கைக் கையாளும் வழக்கறிஞர் கே கணேஷும் காவல் நிலையத்தில் இருந்தார்.

“சிவபாலனின் உடல் இப்போது கோலாலம்பூர் மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது, என்ன நடந்தது என்பது குறித்து மேலும் ஆராய்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சந்தேக நபருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், செலயாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரிஃபாய் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆரம்ப விசாரணையில், சந்தேக நபர் இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், கோலாலம்பூர் மருத்துவமனை தடயவியல் துறையின் முழு அறிக்கை நிலுவையில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.