ஜொகூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் எம்.பி.க்களும், அவசரகாலத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை விவாதிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.
மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்க, நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் கூறியுள்ளது.
“மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுடன் இணைந்து, இருதரப்பினரின் ஒத்துழைப்போடு மத்திய அரசு தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது.
“சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உத்தரவின்படி, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திற்காக, குறிப்பாக ஜொகூர் மக்கள் வாழ்வாதாரம் தொடர்பாக விவாதிக்க, ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய பரிசீலிக்குமாறு ஜொகூர் பி.எச். மாநில மந்திரி பெசார் ஹஸ்னி முகமட்டிடம் கேட்டுகொள்கிறது.
“அதிகரித்து வரும் இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்வதில், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்கிறோம், உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
அந்த அறிக்கையில் ஜொகூர் அமானா தலைவர் அமினோல்ஹுடா ஹசான், ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் சையத் இப்ராஹிம் சையத் நோ மற்றும் ஜொகூர் டிஏபி தலைவர் செனட்டர் லீயு சின் தோங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நேற்று, ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில், மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஜொகூர் மாநில அரசாங்கம் இந்த வாரத்தில் அக்கூட்டத்தை நடத்தும்.
இது தவிர, சமூகத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவுவது, தடுப்பூசி திட்டமிடல், பெரிய அளவிலான மற்றும் இலவசத் திரையிடல் சோதனைகளை அமல்படுத்துதல், மாநில மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஜொகூர்-சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறக்கத் திட்டமிடுதல் ஆகியவைக் குறித்தும் கலந்துபேச ஜொகூர் பி.எச். வலியுறுத்தியுள்ளது.