தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பான அறிக்கை – சையத் சதிக்கிடம் விசாரணை

பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏப்ரல் 18-ம் தேதி இறந்த ஏ கணபதிக்கு நீதி கோரி, ஒரு வீடியோ கிளிப்பில் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாக மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் இன்று தெரிவித்தார்.

தனது கீச்சகத்தின் மூலம், சையத் சாதிக் தனக்கு எதிராக காவல்துறை விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார், ஆனால் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று அவர் உறுதியளித்தார்.

அதே கோம்பாக் காவல் நிலையத்தில், நேற்று நிகழ்ந்ததாகக் கூறப்படும் மற்றுமொரு கைதியின் இறப்பு குறித்தும் சையத் சதிக் இன்று கீச்சகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் போலிஸ் விசாரணையில் இருந்த அதே நாளில், நாட்டில் இன்னுமொரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது, இன்னொரு கைதி போலிஸ் தடுப்புக் காவலில் இறந்து போனார்.

“சகோதரர் எஸ் சிவபாலன், ஒரு பாதுகாவலர், அவருக்கான நீதி. சிவபாலனின் மரணத்தில் இன்னும் துயரமானது என்னவென்றால், கணபதி மரணமடைந்த அதே காவல் நிலையத்தில் இதுவும் நடந்துள்ளது.

“இதனைச் சகித்துகொள்ள முடியாதது. நீதி கேட்டு, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க தனது அடிப்படை கடமையை நிறைவேற்றும் நாடாளுமன்ற உறுப்பினரை ஏன் அவர்கள் விசாரிக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கணபதியின் மரணம் குறித்து வெளியிடப்பட்ட மூன்று கட்டுரைகள் தொடர்பாக இரண்டு மலேசியாகினி செய்தியாளர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

மற்றொரு மலேசியாகினி செய்தியாளரும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார், ஆனால் தற்போது கோவிட் -19 தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.