துண்டிக்கப்படாது – 6 மாதங்களுக்கும் குறைவான வீட்டு மின்சாரக் கட்டண நிலுவை

தீபகற்ப மலேசியாவில், ஜூன் 30 வரையில், 6 மாதங்களுக்கு நிலுவைத் தொகை கொண்ட குடியிருப்பு வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்படாது என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காலத்தில், மக்களுக்கு உதவ தெனகா நேஷனல் பெர்ஹாட்டுடன் இணைந்த அரசாங்கத்தின் இந்த முயற்சி, தீபகற்ப மலேசியாவில் 6.96 மில்லியன் உள்நாட்டு நுகர்வோருக்குப் பயனளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

உள்நாட்டு நுகர்வோர் தங்கள் மின்சாரக் கட்டணங்களை நிர்வகிக்க உதவுவதற்காக, எளிதானக் கட்டணத் திட்டமும் டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் ஷம்சுல் அனுவார்.

“இந்த முயற்சி தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழ்நிலையில், மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க உதவும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், மின்சாரக் கட்டண நிலுவைத் தொகை ஆறு மாதங்களுக்கு மிகாமல் உள்ள உள்நாட்டு நுகர்வோருக்கு, மின்சார வழங்கல் எதுவும் துண்டிக்கப்படக்கூடாது என்று டிசம்பர் 21 அன்று அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு நுகர்வோருக்கு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில், ஆறு மாத எளிதானக் கட்டணத் திட்டமும் (Pelan Bayaran Mudah) வழங்கப்படுகிறது.

முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக, மே 12 முதல் ஜூன் 7 வரை, நாடு முழுவதும் பி.கே.பி. செயல்படுத்தப்படுவதாக பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.

  • பெர்னாமா