அவசர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை டிஏபி ஆதரிக்காது

பிரதமர் முஹைதீன் யாசின், நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை நடத்தினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்று டிஏபி இன்று உறுதியளித்தது.

இன்று ஓர் அறிக்கையில், டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், 42 டிஏபி எம்.பி.க்களும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்கள் மற்றும் அது தொடர்புடைய விஷயங்கள் குறித்து மட்டுமே விவாதிக்க விரும்புவதாகக் கூறினார்.

“ஜொகூர் மாநிலம் செய்ததைப் போலவே, தேசியக் கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்றத்தை அவசர அமர்வுக்கு அழைக்க வேண்டும்.

“பிரதமர் முஹைதீன் யாசினின் தீவிர அரசியல் அச்சங்களைத் தீர்ப்பதற்கு, மக்களவை உடனடியாக கூடினால், 42 டிஏபி எம்.பி.க்கள் அவருக்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையற்றத் தீர்மானத்தையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று டிஏபி உறுதியளிக்கிறது.

தற்போதைய தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தோல்வியை விட, ஜொகூர் சுல்தான் முன்னெடுத்த முழு அரசாங்க அல்லது அனைத்து மக்களின் நலன் குறித்த அணுகுமுறை சிறந்தது என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் கூறினார்.

மெதுவாக நகரும் தடுப்பூசி திட்டத்துடன், மலேசியாவில் தனிநபர் கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தின் அவசர அமர்வு தேவை என்று லிம் விளக்கினார்.

“கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிபெற முழு அரசாங்க அணுகுமுறை மட்டுமல்லாமல் அனைத்து மக்களையும் அணுக வேண்டும் என்பதை, இந்த அவலநிலை தேசிய முன்னணி நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, நேரடி நிதியில் RM60 பில்லியன் இருந்தாலும், கோவிட் -19 நெருக்கடி ஏன் மோசமடைகிறது என்பதற்கான முழு விளக்கத்தையும் தேசிய முன்னணி வழங்க வேண்டும்.

“கோவிட் -19 நிதிக்கு, 2020-ஆம் ஆண்டில் RM38 பில்லியன், 2021-இல் RM17 பில்லியன் மற்றும் தேசிய அறக்கட்டளை நிதியத்தின் (KWAN) நிதியிலிருந்து மற்றொரு RM5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று லிம் மேலும் கூறினார்.

முஹைதீன் நிர்வாகம் ஜனவரி மாதம் அவசரகால அறிவிப்பை கோரியது, இது மற்றவற்றுடன் நாடாளுமன்றத்தையும் இடைநிறுத்தியது.

அதே நேரத்தில், பள்ளிகளும் பெரும்பாலான வணிகங்களும் திறந்துவிடப்பட்டன.

இருப்பினும், அவசரகாலத்தின் நான்கு மாதங்களில், கோவிட் -19 பரிமாற்றம் மேலும் மோசமடைந்தது, அன்றாட இறப்புகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு மற்றும் தீவிரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.