தமிழக அரசால் முதல்முறையாக அமைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் நலன்களைக் கையாளும் அமைக்சிச்சின் மலேசியப் பிரதிநிதியாக ஒரு தூயத் தமிழரை நியமிக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் ச விக்னேசுவரன் அவர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மனு ஒன்றை வழங்கி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்
“மலேசிய இந்தியர்களில், சுமார் 80 விழுக்காடு தமிழர்கள் என்பதால், புலம்பெயர்ந்த அமைச்சின் மலேசியப் பிரதிநிதியாக மலேசியத் தமிழரேயே நியமிக்க, தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மஇகா முன்வர வேண்டும் என அதன் தேசியத் தலைவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார் அவர்.
2009 தமிழீழ இனப்படுகொலைக்குப் பிறகு, உலகத் தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடந்த 10 ஆண்டுகளாகப் புலம்பெயர் தமிழர் அமைச்சு ஒன்றை உருவாக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வரிய வாய்ப்பை நழுவ விடாது, இக்கருத்தையே முன்னுறுத்தியும் வலியுறுத்தியும் தங்களைப் போன்று ஒற்றைச் சிந்தனையில், நாட்டிலுள்ள தமிழர் அமைப்புகளும் கோரிக்கை முன்வைக்க வேண்டுமென, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.