வணிக நடவடிக்கைகள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே – இஸ்மாயில்

பி.கே.பி. 3.0-ஐ செயல்படுத்துவதில், பொருளாதாரத் துறைகளுக்குப் புதிய எஸ்ஓபிகளைச் சேர்க்கவுள்ளதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

“வணிக நடவடிக்கைகளுக்கு காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே அனுமதி,” என்று அவர் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுடன் இணைந்து நடநத செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

பி.கே.பி. 3.0 கட்டுப்பாடுகளின் அனைத்து கூடுதல் எஸ்ஓபிகளும் தீபகற்பம் முழுவதும் மற்றும் லாபுவானில், மே 25 முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்மாயில் விளக்கினார்.

இதற்கிடையில், பேருந்துகள் மற்றும் எல்ஆர்டி போன்ற பொது போக்குவரத்துகளின் பயணிகள் கொள்திறனும் 50 விழுக்காடு பயணிகளுக்குக் குறைக்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, கோவிட் -19 புதிய நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்தால், அரசாங்கம் மீண்டும் எஸ்ஓபியைத் தளர்த்தும்.

“முன்பு போலவே, பி.கே.பி. 1.0-இன் கண்டிப்பான எஸ்ஓபியிலிருந்து நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும்போது நிபந்தனைக்குரிய பி.கே.பி., பின்னர் மீட்புநிலை பி.கே.பி. என மீண்டும் ஒரு தளர்வான பி.கே.பி. அமலாக்கத்திற்கு வரும்.

“நேர்வுகள் குறையும் போது, ​​நாங்கள் திறந்துவிடுவோம், அதிகரிக்கும் போது நாங்கள் மீண்டும் மூடுவோம். எனவே, இந்த திறந்து மூடும், திறந்து மூடும் நிலை தொடரும்,” என்று அவர் விளக்கினார்.