பி.கே.பி. 3.0: லாபுவான், தீபகற்பத்தில் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0-ன் (பி.கே.பி. 3.0), வீட்டிலிருந்து பணியாற்றும் புதிய கட்டளை, தனியார் மற்றும் பொதுத் துறைகளைச் சார்ந்த ஏழு மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி இன்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானில் மே 25 முதல் ஜூன் 7 வரை செயல்படுத்தப்படும்.

இந்த உத்தரவு, அரசு ஊழியர்களில் 80 விழுக்காட்டினரையும் (750,000 ஊழியர்கள்), ஆறு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை உள்ளடக்கிய தனியார் துறையினரையும் (40 விழுக்காடு) உள்ளடக்கியது என்று இஸ்மாயில் விளக்கினார்.

வணிக வளாகங்களின் இயக்க நேரத்தை முன்பிருந்த இரவு 10 மணி என்பதை, இரவு 8 மணியென குறைப்பதன் மூலம் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய எஸ்ஓபி உள்ளது என்றார்.

சாலைகளில், பி.கே.பி. எஸ்ஓபிகளை மீறுபவர்களுக்கு எதிராக சம்மன்களை வெளியிடுவதற்கு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு நிறுவனங்களும் அதிகரித்த கண்காணிப்புடன், அதிகாரிகள் அதிக சாலைத் தடைகளை உருவாக்குவார்கள் என்றார்.

புத்ராஜெயாவில் இன்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுடன் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

‘வீட்டிலிருந்து வேலை – கிராப் ஓட்டுநர்களாக முடியாது’

இது தொடர்பாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் மொஹமட் ஸூகி அலி, அனைத்துத் துறைத் தலைவர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வழிமுறைகளுடன், அலுவலகத்தில் தேவைப்படும் 20 விழுக்காடு அரசு ஊழியர்கள் மட்டுமே இருக்க திட்டமிட்டுள்ளனர்.

“அலுவலகத்திற்கு வருகை என்பது, வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத செயல்முறைகளுக்கு மட்டுமே, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும்,” என்று ஸூகி கூறினார், கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களும் இயங்கலையில் செய்யப்படும்.

வீட்டிலிருந்து பணிபுரியும் பெரும்பான்மையினர், அவர்கள் வேலை நேரத்தில் தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்வது உள்ளிட்ட விதிகளுக்கு கட்டுப்படுவார்கள் என்றார்.

கிராப் ஓட்டுநர்களாக மாறுவது அல்லது வேலை நேரத்தில் வீட்டில் இல்லாதது போன்றவை தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் என்று அவர் கூறினார்.

இந்த இறுக்கமான எஸ்.ஓ.பி.-கள் பேரங்காடிகள், பல்வகைப் பொருள் விற்பனை கடைகள், ஸ்டால்கள், சலவை நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களையும் (நெடுஞ்சாலைகளில் தவிர) உள்ளடக்கியது.

முன்னதாக, வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டன.

இரவு சந்தை வணிகம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் தெரிவித்தார்.