மறைந்த எஸ் சிவபாலனின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ, மூன்று முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார், கைதியின் மரணம் குறித்து மேல் விசாரணை தேவை என்று அவர் கூறினார்.
மறுபுறம், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது, இந்த முரண்பாடுகளை மறுத்தார்.
சிவபாலன், 43, ஒரு பாதுகாவலர், மே 20-ம் தேதி, கோம்பாக் போலிசாரால் கைது செய்யப்பட்ட 70 நிமிடங்களுக்குப் பிறகு இறந்தார்.
மலேசியாகினி கண்ணுற்ற மரணச் சான்றிதழின் அடிப்படையில், சிவபாலன் மதியம் 12.30 மணியளவில் “கடுமையான மாரடைப்பு” அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் செலாயாங் மருத்துவமனையில் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிவபாலன் கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகத்தில் (ஐபிடி) இறந்துபோனார் என்று கூறும் அர்ஜுனைடியின் அறிக்கையிலிருந்து இது வேறுபட்டது.
சார்லஸின் கூற்றுப்படி, மே 20-ம் தேதி, சிவபாலனின் சகோதரியைக் காவல்துறையினர் தொடர்பு கொண்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்தனர், ஆனால் சிவபாலன் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் இது நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“சிவபாலனின் சகோதரிக்கு மாலை 3 மணிக்கு ‘உங்கள் சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், தயவுசெய்து செலாயாங் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்,” என்று ஓர் அழைப்பு வந்தது.
“அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, அத்தகைய மனிதர் (சிவபாலன்) பெயரில் பதிவு எதுவும் இல்லை,” என்று மருத்துவமனை அவர் குடும்பத்தினரிடம் கூறியதாக, மலேசியாகினி தொடர்பு கொண்டபோது சார்லஸ் கூறினார்.
மூன்றாவது முரண்பாடு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் போலிஸ் புகாரின் காரணமாகச் சிவபாலனைப் போலீசார் எவ்வாறு கைது செய்தனர் என்று சார்லஸ் கேள்வி எழுப்பினார்.
“விசாரிக்க ஏன் இத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்?” என்பது அந்த டிஏபி பிரதிநிதியின் கேள்வி.
சார்லஸ் எழுப்பிய சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் பெற தொடர்பு கொண்டபோது, சிவபாலன் கோம்பாக் ஐபிடி-யில்தான் இறந்தார் என்று அர்ஜுனைடி வலியுறுத்தினார்.
“அவர் இறந்தது செலாயாங் மருத்துவமனையில் அல்ல, கோம்பாக் ஐபிடியில்தான். பின்னர் அவர் பிரேதப் பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்,” என்றார் அவர்.
மரணம் பற்றியச் செய்திகளைத் தெரிவிக்க, சிவபாலனின் சகோதரியைக் காவல்துறையினர் தொடர்பு கொண்டதாகவும், அவர் நோய்வாய்பட்டுள்ளார் எனக் கூறுவதற்கு அல்ல என்றும் அர்ஜுனைடி விளக்கினார்.
“அவர் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை, அவர் இறந்துவிட்டார் என்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும்தான் நாங்கள் தெரிவித்தோம். இந்த அறிவிப்பு முன்னர் செய்யப்பட்டது (சார்லஸின் கூற்றுடன் ஒப்பிடும்போது), பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை.
அச்சுறுத்தல் குற்றங்களுக்காக, இறந்தவர் மீது காவல்துறையினர் கைது ஆணை வைத்திருந்ததாக அர்ஜுனைடி மேலும் கூறினார்.
“கைது ஆணை இருந்ததால், இறந்தவரைப் போலீசார் கைது செய்தனர். நாங்கள் அவரை விசாரணைக்காக கைது செய்யவில்லை, கைது ஆணை இருந்ததால் கைது செய்தோம் என்று நேற்று நான் விளக்கினேன்.
“அதன்பிறகு, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகப் போலீஸ் ஜாமீன் வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
சிவபாலனின் மரணம், எ கணபதியின் மரணம் பற்றியப் பிரச்சினைகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் ஏற்பட்டுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதி இறந்து போனார்.
சிவபாலனைப் போலவே, கணபதியும் கோம்பாக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரேதப் பரிசோதனையின் முடிவுகள், இறந்தவரின் உடலில் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என வந்துள்ளதைச் சிலாங்கூர் போலீசார் உறுதிப்படுத்தினர்.
இந்த மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது, அது தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வழக்கை எதிர்த்து விசாரணை நடவடிக்கைகள் நடத்தவும் அவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அனைத்து ஆதாரங்களும் அதன் அசல் வடிவத்தில் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த விரைவான விசாரணைக்குச் சார்லஸ் அழைப்பு விடுத்தார்.
சிறந்த மேற்பார்வையை உறுதி செய்வதற்காக, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹகாம்) மற்றும் அமலாக்க முகமை ஒருமைப்பாடு ஆணையம் (ஈ.ஏ.ஐ.சி) இந்த விசாரணைகளுக்கு தலைமையேற்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
“காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி முன்கூட்டியே ஒரு சந்திப்பை மேற்கொள்ள வேண்டும், இதனால் (சிசிடிவி பதிவுகள்), ஆவணங்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பிறவற்றை விசாரணை தொடங்குவதற்கு முன்பு தனி இடத்தில் வைக்க முடியும்.
“இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நாம் சாதாரணச் செயல்முறைகளைப் பின்பற்றினால், நம்மால் உண்மையைக் காண முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.