சையத் சதிக்கை ‘தொல்லை’ செய்வதை நிறுத்திவிட்டு, தடுப்புக்காவல் மரணங்களை விசாரியுங்கள்

மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மானுக்கு எதிரான “துன்புறுத்தல்களை” நிறுத்திவிட்டு, தடுப்புக் காவலில் இறந்த எ கணபதி மற்றும் எஸ் சிவபாலன் வழக்குகள் குறித்து விசாரணை நடத்த, போலீசாருக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவுறுத்த வேண்டுமென செபுத்தே எம்.பி. திரேசா கோக் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

“தடுப்புக் காவலில் மரணமடைந்த கணபதி குறித்து அறிக்கை வெளியிட்டதால், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக்கிற்கு எதிராக காவல்துறை மற்றும் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) விசாரணை நடத்துவது, அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்வது போன்றவை மிகவும் பொருத்தமற்றது மற்றும் முரட்டுத்தனமான செயல் ஆகும்.

“கணபதியின் மரணம் குறித்த அவரது கருத்துக்களை விசாரிக்க காவல்துறையும் எம்.சி.எம்.சி.யும் சையத் சதிக்கின் படவரி கணக்கில் உள்நுழைய விரும்புவதைப் படித்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று கோக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“போலிஸ் காவலில் கணபதி மரணம் குறித்து சையத் சாதிக் விமர்சித்ததில் என்ன தவறு இருக்கிறது? இது தொடர்பாக சையத் சதிக் ஓர் எம்.பி.யாக தனது பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வருகிறார். காவல்துறை அவரது கருத்துக்களுக்கு அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலம் பதிலளித்திருக்க வேண்டுமே தவிர, அவருக்கு எதிராக விசாரணை நடத்தக்கூடாது,” என்று அவர் மேலும் சொன்னார்.

சையத் சதிக்கிற்கு எதிராக விசாரணை நடத்த, எம்.சி.எம்.சி.க்கு அறிவுறுத்தியுள்ளாரா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லாவைக் கோக் கேட்டுக்கொண்டார்.

“முன்னாள் உள்துறை அமைச்சரும், பிரதமருமான முஹைதீன் போலிஸ் படையில் சீர்திருத்தங்கள் மற்றும் சுயாதீனப் போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) நிறுவுவது குறித்து இன்னும் தீவிரமாக உள்ளாரா என்பதையும் மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

“முஹைதீன் மற்றும் சைஃபுட்டின் ஆகியோர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள், அங்கு ஐபிசிஎம்சி நிறுவப்படுவது பி.எச். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் கொள்கைகளில் ஒன்றாகும்.

“சையத் சதிக்கின் கருத்துக்கள் பி.எச். அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ளன. முஹைதீன் மற்றும் சைஃபுட்டின் அப்துல்லா ஆகியோர் இந்தக் கொள்கையிலிருந்து விலகிவிட்டார்களா?

“போலிஸ் காவலில் தொடர்ச்சியான மரணங்கள் குறித்து, முஹைதீன், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், மேலும் கணபதி மற்றும் சிவபாலன் ஆகியோரின் மரணங்கள் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கணபதி வழக்கு தொடர்பான செய்திகள் தொடர்பாக, இரண்டு மலேசியாகினி செய்தியாளர்களிடமிருந்தும் போலிசார் வாக்குமூலம் எடுத்துள்ளனர்.

கணபதி வழக்கோடு தனது இடமாற்றத்தை இணைத்த ஃபிரி மலேசியா டூடே செய்தித்தளம் மீது, கோம்பாக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே RM10 மில்லியன் வழக்குத் தொடுக்கவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று, கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ சிவபாலனின் குடும்பத்தைச் சந்தித்தார், அவர் மே 20-ம் தேதி, கோம்பாக் போலிசாரால் கைது செய்யப்பட்ட 70 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததாகக் கூறப்படுகிறது.