மலேசியத் தேசியப் பல்கலைக்கழகக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை (எச்.பி.கே.கே. யு.கே.எம்.) மற்றும் சைபர்ஜயா மருத்துவமனை இரண்டையும், கோவிட் -19 மருத்துவமனைகளாக உருவாக்குவதற்கானச் சாத்தியக்கூறுகளைச் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
முகநூல் அறிக்கை ஒன்றில், டாக்டர் நூர் ஹிஷாம், சுகாதார அமைச்சிற்கும் யுகேஎம் நிறுவனத்திற்கும் இடையிலான சந்திப்பில் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.
“முந்தைய இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, மலேசியா முழுவதும் தீவிரச் சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) பயன்பாடு 60 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் 94 விழுக்காடு அதிகரித்துள்ளது.
“கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் ஐ.சி.யூ. படுக்கைகளின் பயன்பாட்டு விகிதம் இப்போது 100 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள எச்.பி.கே.கே. யு.கே.எம்., 243 படுக்கைகள் கொண்டது, இதில் 28 படுக்கைகள் பெரியவர்களுக்கு ஏற்றார்போல் அமைந்துள்ளன, அவை கோவிட் -19 நோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும், குறிப்பாக கடுமையான அறிகுறிகளுடன் கொண்ட நோயாளிகளுக்கு என்று டாக்டர் நூர் ஹிஷாம் விளக்கினார்.
அவசரகால பிரகடனத்தின் 2021, பிரிவு 3 மற்றும் பிரிவு 4-இன் கீழ், அமைச்சு கட்டிடங்களின் தற்காலிக உரிமையை அமல்படுத்தலாம், மேலும், கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக, கற்பித்தல் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வளங்களை (மனித வளங்கள் உட்பட) பயன்படுத்தக் கோரலாம்.
எச்.பி.கே.கே. யு.கே.எம். தவிர, புதிய சைபர்ஜயா மருத்துவமனையைக் கோவிட் -19 மருத்துவமனையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அமைச்சு கவனித்து வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளின் திறனை அதிகரிப்பதைத் தவிர, கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத் தனியார் மருத்துவமனைகளையும் சுகாதார அமைச்சு உள்ளடக்கும்.
மே 20 தேதியிட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு எழுதியக் கடிதத்தில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சுக்குத் தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பு தேவை என்று டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் நடுப்பகுதியில் மலேசியாவில் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது, 2,000 புதிய நேர்வுகளைத் தாண்டியது மற்றும் இந்த எண்ணிக்கை 40 நாட்களுக்குள் மூன்று மடங்காக அதிகரித்தது.
நேற்று, மலேசியாவில் 6,320 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 50 இறப்புகளும் பதிவாகியுள்ளன.