டாக்டர் மகாதிர் முகமதுவின் கட்சியான, பெஜுவாங் தனா ஆயேர் கட்சி (பெஜுவாங்) பதிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிக்க விரும்பவில்லை.
இந்த விஷயத்தைப் பற்றி, உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடினுடன் விவாதிக்க மாட்டேன் என்று டாக்டர் மகாதீர் கூறியதாக தி மலேசிய இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.
“இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம், நாங்கள் அவர்களுடன் இணைய மாட்டோம்,” என்று அவர் கூறினார்.
பெஜுவாங்கின் பதிவு விண்ணப்பத்தை அரசியல் அடிப்படையில் ஹம்சா நிராகரித்தார் என்றும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.
பதிவு செய்யப்பட வேண்டிய பெஜுவாங்கின் விண்ணப்பம் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததாகக் கூறப்பட்டாலும், சங்கங்களின் பதிவுத் துறை (ஆர்.ஓ.எஸ்.) நிராகரித்தது.
ஹம்ஸா மற்றும் பிரதமர் முஹைதீன் யாசின் ஆகியோரால் வேண்டுமென்றே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெஜுவாங்கின் தலைவரான டாக்டர் மகாதீர் நம்புகிறார்.
“எதிரி கட்சிக்குப் பதிவு இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட முடியாது, அதனால் அவர்கள் போட்டியிடாமல் வெற்றி பெற முடியும் என்று ஹம்சா, முஹைதீன் கருதுகின்றனர்.
“இது ஒரு மோசடி, அரசாங்கம் வெளிப்படையாகவே மக்களை ஏமாற்றுகிறது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் சின்னத்தின் பயன்பாட்டையும் நிறுத்த வேண்டுமென பெஜுவாங்’கிற்கு ஆர்.ஓ.எஸ்.-இலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்தன.
மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் தலைமையிலான இகாத்தான் டெமோக்கராடிக் மலேசியாவுக்கும் (மூடா) இன்னும் ஆர்.ஓ.எஸ்.-இல் பதிவு கிடைக்கவில்லை, இது அரசியல் தலையீடு என்றக் குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.