மலேசியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முன்னர் செய்திகள் வந்தபோதிலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் மெதுவாக வழங்கப்படுவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
மலேசியா அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 15 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்கியதாக கூறிய அன்வர், ஆனால் இதுவரை ஒரு மில்லியன் டோஸ் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது – அதாவது, மொத்த ஆர்டரில் ஏழு விழுக்காடு மட்டுமே.
தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் முறையே சீனாவிலிருந்து 59, 48 மற்றும் 32 விழுக்காடு தடுப்பூசி ஆர்டர்களைப் பெற்றுள்ளன, இதில் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளும் அடங்கும்.
“மலேசியாவுக்கு மட்டும் ஏன் இந்த மோசமான நிலை?
“பிரதமர் சீனாவைத் தொடர்புகொண்டு, அதனை விரைவுபடுத்த கேட்க முடியாத அளவு, அதிக வேலை பலுவில் இருக்கிறாரா? கடந்தாண்டு அக்டோபரில் மலேசியா வந்த சீன வெளியுறவு அமைச்சர், வாங் இயீ, மலேசியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினாரே,” என்று கேள்வி எழுப்பிய அன்வர், கடந்த ஏப்ரலில் சீனாவை மலேசியாவின் “மூத்த சகோதரர்” என்று வர்ணித்த ஹிஷாமுடின் ஹுசைனின் அறிக்கையையும் குறிப்பிட்டார்.
பி.கே.ஆர். தலைவரான அன்வர், நேற்று தனது முகநூலில் ஒரு நேரடி ஒளிபரப்பில் இவ்வாறு கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, சீனா உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதில் மலேசியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மலேசியாவும் சீனாவும் கடந்த ஆண்டு நவம்பரில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதுவரை, ஃபைசர், அஸ்ட்ராஸெனெகா மற்றும் சினோவாக் ஆகிய மூன்று தடுப்பூசிகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
இதற்கிடையில், சினோஃபார்மைப் பயன்படுத்துவதற்குத் தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.) ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அன்வர் கேள்வி எழுப்பினார்.
இந்த மாதத்தில் 10,000 டோஸ் தடுப்பூசி மலேசியாவிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அது பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று முந்தைய அறிக்கையில் அவர் கூறினார்.
அர்ஜென்டினா, புருணை, கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உள்ளிட்ட சுமார் 42 நாடுகள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.
“இதுவரை, (அரசாங்கத்தின்) அறிக்கையின்படி, அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இது ஒரு மந்தநிலை மற்றும் தோல்வி என்று நான் நினைக்கிறேன், இது அரசாங்கத்தின் தோல்வி, இதனால் மக்கள் (அவர்களின்) அலட்சியம், பலவீனம் மற்றும் ஆணவம் காரணமாகக் கொல்லப்படுகிறார்கள்,” என்றார் அந்தப் போர்ட்டிக்சன் எம்.பி.
அரசாங்கம் எத்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்தினாலும், தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல தடுப்பூசி திட்டங்கள் இல்லாவிட்டால் தொற்றுநோய் பரவலைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.