கடந்த வெள்ளிக்கிழமை, கெந்திங் ஹைலேண்ட்ஸ் கேசினோவை மூட மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்ட போதிலும், அது இன்னும் செயல்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தைக் கூறிய கேசினோவில் வேலை செய்யும் ஒரு ஊழியர், அவர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
வருகையாளர்களுக்கு அங்குச் சேவை இன்னும் வழங்கப்பட்டு வருவதாகவும், நிர்வாகத்திடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை ஓர் (இறுதி) உத்தரவைப் பிறப்பித்தார், ஆனால் நாங்கள் ஏன் இன்னும் செயல்படுகிறோம்?” என்று அவரது பெயரை இரகசியம் காக்கச் சொன்ன அந்த ஊழியர் கேள்வி எழுப்பினார்.
மே 12-ஆம் தேதி, நாடு முழுவதும் பி.கே.பி. 3.0 அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, கெந்திங் ரிசோர்ட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு குறைந்துள்ளது என்று அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
கேசினோ பிரிவுகள் ஒன்றில் பணியாற்றும் அந்த ஊழியர், நேற்று 20 பேருக்கும், இன்று காலையில் சுமார் 10 பேருக்கும் சேவையாற்றியுள்ளார்.
“நான் சில வாடிக்கையாளர்களுடன் (நேற்று) பேசினேன். சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி) வெளியிட்ட கடிதத்தைப் பயன்படுத்தி இங்கு வந்ததாக அவர்கள் கூறினர்.
“ஆயினும், இன்று காலை வந்தவர்கள் எங்கள் ஹோட்டலின் நீண்டகால விருந்தினர்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, சூதாட்ட மேஜையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் கடினம்.
“ஊழியர்கள் விதிகளைப் பின்பற்றினாலும், விளையாட்டுகளின் போது வாடிக்கையாளர்களிடையே நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்க முடியாது.
“எனது சகாக்களும் நானும் தொற்று அபாயத்தைப் பற்றி கவலைப்படுகிறோம், ஆனால் இதுவரை நிர்வாகத்தால் எதுவும் செய்யப்படவில்லை. எங்களுக்குப் பயமாக இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
சி.சி.டி.வி.-யால் அந்தப் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், சூதாட்ட இடத்தின் பட ஆதாரத்தை அவரால் வழங்க முடியவில்லை,
இதுகுறித்து கருத்து அறிய, மலேசியாகினி பலமுறை கெந்திங் குழுமத்தையும் நிதி அமைச்சையும் தொடர்பு கொண்டபோதிலும், எதுவும் பலனளிக்கவில்லை.
அனைத்து சூதாட்ட நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது நிதி அமைச்சு ஆகும்.
மலேசியாகினிக்கு அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில், கடந்த வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) தனது கூட்டத்தில் கேசினோவை மூட வேண்டும் என்று முடிவு செய்ததாக இஸ்மாயில் கூறினார்.
இருப்பினும், மற்ற விசாரணைகளுக்கு நிதி அமைச்சை அணுகுமாறு அவர் மலேசியாகினியிடம் கேட்டார்.
கேசினோ இன்னும் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக இஸ்மாயில் கூறினார்.
முன்னதாக, “சுற்றுலா குமிழி” மூலம் கெந்திங் மலைக்குச் சுற்றுலாப் பயணிகளை அரசாங்கம் அனுமதித்தது. இது கோவிட் -19 தொற்று பரவலுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையில், அமலாக்க அமைப்பின் ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம், கேசினோ நிதி அமைச்சின் அதிகார எல்லைக்கு உட்பட்டுள்ளதால், அவர்களால் அதற்கு எதிராக எதையும் செயல்படுத்த முடியாது என்று கூறினார்.
“நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். நான் என்ன சொல்ல முடியும்? இது எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது,” என்று அந்த வட்டாரம் கூறியது.
எவ்வாறாயினும், அவரது அறிக்கை தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988-க்கு முரணானது, இது தொற்று நோய்களைத் தடுக்க வளாகங்களை மூடுவதற்கு உத்தரவிட சுகாதாரத் தலைமை இயக்குநர் தனது அதிகாரிகள் அல்லது பிறச் சட்ட அமலாக்க அமைப்புகளை நியமிக்க அனுமதிக்கிறது.