கோவிட் -19 நோய்த்தொற்றைக் கையாளும் போது, மிகவும் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்பதைப் பிரதமரிடமிருந்து காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று செல்வாக்கு மிக்க டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டபோது, தன்னை “முட்டாள்” என்று அழைக்கும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள முஹைதீன் யாசின் தயாராக இருக்கிறார் என்று அவர் கூறினார்,
“கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் நடவடிக்கைகளில், தன்னை ஒரு ‘முட்டாள் பிரதமர்’ என்று மக்கள் கோபப்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் அவர் கவலைப்படவில்லை என்று முஹைதீன் நேற்று இரவு தனது நேர்காணலின் சிறப்பு ஒளிபரப்பில் கூறினார்.
“இருப்பினும், ‘முட்டாள்தனமாகச்’ செயல்படும் காவல்துறையினர் மீது, அவர்கள் `முட்டாள்கள்` என்று மக்கள் கோபப்பட முடியுமா?” என இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
`நீலாய் 3 சிலாங்கூரில் இருக்கிறது` என்று கேலியாகப் பகிர்ந்த முகநூல் உரிமையாளருக்கு எதிரான போலிஸ் விசாரணை குறித்து லிம் கருத்து தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (b) (பொது மிரட்டலை ஏற்படுத்தும்) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன், பிரிவு 233 (சேவை வலையமைப்பின் தவறான பயன்பாடு) ஆகியவற்றின் படி விசாரணைகள் நடத்தப்பட்டன.
பிரபலக் கலைஞர் நீலோஃபா மற்றும் அவரது கணவர் முஹம்மது ஹரிஸ் மொஹமட் இஸ்மாயில் ஆகியோர், நெகிரி செம்பிலான், நீலாய் 3-இல் உள்ள ஒரு கம்பளக் கடைக்கு மாநில எல்லையைக் கடந்து சென்றது, எஸ்ஓபியை மீறியச் செயல் எனக் குற்றம் சாட்டப்பட்டதனால் இந்தப் பிரச்சினை எழுந்தது.
தம்பதியினர் தங்கள் நுழைவை வணிக வளாகத்தில் பதிவு செய்யவில்லை, முகக்கவரி அணியவில்லை என்று மட்டுமே குற்றம் சாட்டப்பட்டது.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், போலிசாரின் காவலில் இருந்தபோது இறந்த எ கணபதி மற்றும் எஸ் சிவபாலன் ஆகியோரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிப்பது போன்ற தீவிரமான விஷயங்கள் போலீசாரிடம் இல்லையா என்று லிம் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு அந்த அளவிற்கு மிகவும் பலவீனமாக இருக்கிறதா என்றும் லிம் எழுப்பினார், “சிலாங்கூரில் நீலாய் 3” போன்ற “பாதிப்பில்லாத நகைச்சுவைகள்” நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடுமா?
புதியத் தேசியக் காவல்துறைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி, பிரதமரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒரு தெளிவான செய்தியைத் தனது குழுவினருக்குக் கொடுக்க வேண்டும், தேவையற்ற இடங்களில், விஷயங்களில் கடுமையாக இருப்பதற்குப் பதிலாக, குற்றங்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.