மலேசியாவில் வாக்களிக்கும் வயது வரம்பை 21-லிருந்து 18 ஆகக் குறைப்பதில் உள்ள தாமதம் குறித்து பிரதமர் முஹைதீன் யாசினும் மற்ற இருவரும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இளம் வாக்காளர் சங்கத்தை (வாக்கு18) பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பதை நடைமுறைப்படுத்துவதில், அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரிய குழுவின் விண்ணப்பம் குறித்த இன்றைய விசாரணையின் போது வழக்கறிஞர்கள் அவ்வாறு வாதிட்டனர்.
சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி), மறுஆய்வைத் தொடர அவர்கள் செய்த விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு ஆட்சேபனை தெரிவித்து, வாக்கு18 வழக்குரைஞர் குழு இந்த வாதத்தைச் சமர்ப்பித்தது.
ஏஜிசி முஹைதீனையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. தேர்தல் ஆணையமும் பிரதிவாதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வாக்கு18-யின் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏஜிசி ஆட்சேபித்ததாக அறிவிக்கப்பட்டது, வாக்களிக்கும் வயதைக் குறைப்பதற்கு முன்னர் தேவையான அனைத்து சட்டங்களும் விதிமுறைகளும் முதலில் மாற்றப்பட வேண்டும் என்று அது வாதிட்டது.
வாக்கு18-யின் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பம் பொறுப்பற்றது, அற்பமானது, சிறுபிள்ளை தனமானது என்று ஏஜிசி கருதுகிறது.
நீதிபதி அஹ்மத் கமால் முகமட் ஷாஹிட் முன்னிலையில் நடந்த இன்றைய விசாரணையின்போது, வாக்கு18-இன் வழக்குரைஞர் குர்டியால் சிங் நிஜார், அக்குழுவிற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றதோடு, மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் வந்து வழக்கு தொடர்பான தங்கள் நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் இப்போது முடிவெடுக்க முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர், ஏனெனில் வழக்கின் விசாரணையின் போது மட்டுமே மூன்று பிரதிவாதிகளும் வாக்குமூலம் மற்றும் பிற நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தங்கள் நியாயத்தை முன்வைக்க முடியும்.
இந்தக் கட்டத்தில், முடிவெடுப்பதற்கான எந்தவொரு பிரமாணப் பத்திரமும் அல்லது பிற ஆதாரங்களும் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பது குர்டியலின் கருத்து.
“எனவே, ஒரு முடிவை எடுப்பதற்கான காரணங்களுடன், அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு, ஒரு கணிசமான விசாரணைக்காக (நீதித்துறை மறுஆய்வுடன் தொடர அனுமதி வழங்கப்பட்டால்) நாம் காத்திருக்க வேண்டும்,” என்று குர்டியல் கூறினார்.