கெந்திங் ரிசோர்ட்ஸ் வெர்ல்ட் தனது கேசினோவை, இன்று முதல் பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரையில் தற்காலிகமாக மூடவுள்ளது.
பஹாங், பெந்தோங்கில் அமைந்துள்ள அந்த ரிசோர்ட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் குழு ஒன்றினால், கெடாவில் ஒரு கோவிட் -19 திரளை உருவானது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து இது அறிவிக்கப்படுகிறது.
இன்று ஓர் அறிக்கையில், கெந்திங் ரிசோர்ட் கேசினோ மூடல் தவிர, ரிசோர்ட்டின் பிறப் பகுதிகள், நாளை தொடங்கி ஜூன் 7 வரையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது எங்கள் ஹோட்டல்கள், உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் பிற வசதிகளையும் உள்ளடக்கியது. இந்தக் காலகட்டத்தில் எங்கள் சலுகைகள் சில கிடைக்காமல் போகலாம்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில், கேசினோ தற்காலிகமாக மூடப்படும் என்று அந்த அறிக்கை கூறியது.
கெந்திங் கேசினோ ஊழியர் ஒருவர், இன்று பிற்பகல் முதல் கெசினோ மூடப்படுவது குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், மாலை 6 மணி முதல் கேசினோ மூடப்படும் என்றும் மலேசியாகினியிடம் கூறினார்.
மே 19-ம் தேதி, கெடா சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் மொஹமட் ஹயாத்தி ஓத்மான், கோவிட் -19 தொற்று சோதனைக்கு நேர்மறை முடிவு கொண்ட 16 பேர் அந்தச் சுற்றுப்பயணக் குழுவில் அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார்.
அந்தத் திரளை “டா லெங்குவாஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று, கெசினோ ஊழியர் ஒருவர், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந்த வெள்ளிக்கிழமை மூட உத்தரவிட்ட போதிலும், அங்கு இன்னும் சுற்றுப் பயணிகள் வருவதாக மலேசியாகினியிடம் கூறினார்.
கேசினோ இன்னும் செயல்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக இஸ்மாயில் கூறினார்.