தோட்டமக்களின் நாயகன் பால் சின்னப்பன் இயற்கை எய்தினார்.

மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், மக்கள் சேவை இயக்கம் போன்றவற்றின் முன்னோடி அமைப்பாளரும் சமூகச் சேவையாளருமான டாக்டர் பால் சின்னப்பன் அவர்கள், நேற்று, 24 மே 2021 இயற்கை எய்தினார். 24.5.1950-இல் பிறந்த அன்னாரின் வயது 71 ஆகும். ச

கடந்த சில மாதங்களாக உடல் நலம் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அன்னார், நேற்று பிற்பகலில் இறந்ததாக அவரின் மகன் அருள் பிரகாஷ் தெரிவித்தார்.

அவரின் பிரிவு, நாட்டிற்கும் ஒரு இழப்பாகும். சமூகத்தின், குறிப்பாகத்   தோட்டமக்களின், அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழல்களின் அடிப்படைகளை நன்குணர்ந்திருந்த அவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமூகச்  சேவைகளுக்காக அர்ப்பணித்திருந்தார்.

தொழிலாளர்கள் மூலதனத்தின் ஆக்கிரமிப்புக்கு அடிமையாக இருப்பதால் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்திருந்த் அவர், மக்களுக்கான விழிப்புணர்வு கல்வி சார்ந்த நடைமுறை பயிற்சிகள் உருவாக்கிப் பாட்டாளிகளிலே தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் உருவாக்கினார்.

சின்னப்பன் 1950, ஏப்ரல் 24-ம் தேதி, மிஞ்யாக் தோட்டத்தில் பிறந்தவர். அவரது தந்தை திரு சவரிமுத்து, தாயார் திருமதி அமிர்தம்.

கல்வி, பொது வாழ்வு

தனது ஆரம்பக் கல்வியை மிஞ்யாக் தோட்டத்திலும், இடைநிலை கல்வியைப் பத்தாங் பெர்ஜுந்தாய், கம்போங் குவாந்தான், சுங்கை திங்கி இடைநிலை பள்ளியிலும் பயின்றார். அதனைத் தொடர்ந்து, 1969-ல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் கிரேட் 2-ல் தேர்ச்சி பெற்றார்.

1970-ம் ஆண்டில், அடிப்படை விவசாயம் குறித்து மொன்போர்ட், பத்துத் தீகாவில் படித்த அவர், 1971 முதல் 1972 வரையில் சமூகச் சேவைகள் பற்றிக் கற்கப் பிலிப்பைன்ஸ் சென்றார். 1973-ல், அடிப்படைக் கூட்டுறவு குறித்து மலேசியக் கூட்டுறவு கல்லூரியில் படித்தார்.

அதனை அடுத்து, 1976 மற்றும் 1977-ம் ஆண்டுகளில், தபால் மூலம், வங்கி தொடர்பான இலண்டன் பயிற்சியில் கலந்துகொண்டார். 1981-ல், கனடாவில் கூட்டுறவு நிர்வாகப் பயிற்சியையும் அமெரிக்காவில் தொடர்பு சாதனங்கள் குறித்த பயிற்சியையும் மேற்கொண்டார்.

மேலும், 1970 முதல் 1990 வரையில் ACCU நடத்திய பயிற்சிகளிலும், 1990 முதல் 2000-ம் ஆண்டு வரையில் ICA, AWCF, CCA நடத்திய பல பயிற்சிகளிலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கத்தோலிக்கத் திருச்சபை ஏற்பாட்டில் நடந்த உள்நாட்டு, வெளிநாட்டு சமூகச் சேவைப் பயிற்சிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர் பால் சின்னப்பன்.

தனது வாழ்வில், பல பயிற்சிகளிலும் கற்றலிலும் ஈடுபட்ட அவர், அவற்றை மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் சமூகச் சேவைகளில் பயன்படுத்தினார். தந்தை பெரியார் பார்வையிலான சமூக மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்பினார்.

பணிகளும் பதவிகளும்

1965 முதல் 1970 வரையில், இளம் கிறிஸ்துவ மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1972 முதல் 1975 வரையில், பத்தாங் பெர்ஜுந்தாய் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் அமைப்பாளராக இருந்தார்.

1975 முதல் 1979 வரையில், யுனைடெட் ஆசியன் வங்கியில் சிறுகடன், சிறுதொழில் பிரிவில் பணியாற்றினார். மேலும், 1980 முதல் 2004 வரையில் முழுநேர ஊழியராக மலேசியத் தேசிய மனித வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றினார்.

மலேசியக் கூட்டுறவு நாணயச் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்த அவர், மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம், பூர்வக் குடிகள் கூட்டுறவு நாணயச் சங்கம் மற்றும் சபா, சரவாக் கூட்டுறவு நாணயச் சங்கங்களுக்கு அமைப்பு வேலைகளைச் செய்ததோடு, உறுப்பினர்களுக்குப் பல பயிற்சிகளும் அளித்துள்ளார்.

மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரான அவர், அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து, மனித உரிமை மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

கூட்டுறவுக் கல்வி, அங்காசா, வறுமை ஒழிப்பு திட்டம், சிறு கடன் மற்றும் சிறு தொழில் திட்டங்களுக்குப் பயிற்சியாளராகவும் இருந்து, மக்களுக்குத் தனது சேவையை வழங்கியுள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினர்களுக்கு மலேசியாஇன்று நிருவாகத்தினர் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இறுதி மரியாதைகளுக்காக, NO 15 JALAN 1, TAMAN SENTOSA, BESTARI JAYA-வில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடல் நாளை (26.5.2021) Fairy Park Meru -வில் பிற்பகல் 12.30 மணீயளவில் அடக்கம் செய்யபப்டும். மேல்படி தகவல் பெற 0192721035 – அருள்பிரகாஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.