அஸ்ட்ராஸெனெகா 2-வது பதிவு – 60 வயதிற்குள்ளானவர்களுக்கு நாளை திறக்கப்படுகிறது

60 வயதிற்குட்பட்டவர்களுக்கான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் இரண்டாவது பதிவு நாளை திறக்கப்படும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், பினாங்கு, சரவாக் மாநிலத்தில் கூச்சிங், மிரி ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கான பதிவு நாளை மதியம் 12 மணிக்குத் திறக்கப்படும்.

இருப்பினும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

புத்ராஜெயாவில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபாவுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, மே 23 முதல் தொடங்கும் அத்தடுப்பூசியின் இரண்டாவது சுற்றுக்கான பதிவு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே திறந்திருந்தது.

அஸ்ட்ராஸெனெகாவைப் பெற மொத்தம் 228,347 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், முன்னதாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இம்முறை தானாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்றும் கைரி கூறினார்.