எல்ஆர்டி விபத்து : அனைத்து பயணிகளுக்கும் RM1,000 உதவித்தொகை

நேற்று இரவு, கிளானா ஜெயா வழிதடத்தில், இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் RM1,000 உதவித்தொகையுடன் தேவைபடும் மற்ற உதவிகளையும் பிரசரானா மலேசியா பெர்ஹாட் வழங்கும்.

இவ்விவகாரத்தை அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகத்துடன் விவாதித்ததாக பிரசரணா குழுமத் தலைவர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 213 பயணிகள் ஈடுபட்டுள்ளனர், அவர்களில் 64 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், மேலும் 6 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூவருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைபடுகிறது.

“பிரசாரனா அனைத்து 213 பயணிகளுக்கும் சிறப்பு உதவி வழங்கும், அவர்களின் நிலைமை தீவிரமானதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கு RM1,000 வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

“அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவச் செலவுகள் உட்பட, அவர்கள் குணமடையும் வரை அனைத்து மருத்துவ உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்,” என்று அவர் இன்று, சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நேற்று இரவு 8.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 47 பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர், மேலும் 166 பேர் இலேசான காயத்திற்கு ஆளாயினர்.

  • பெர்னாமா