ஒரு முக்கியமான சேவைத் துறையில் இருக்கும் கேமரன் மலை விவசாயிகளும் காய்கறி வர்த்தகர்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற வணிக இயக்க நேரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பகுதிகளில் உள்ள உணவு விநியோகச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோக் கோங் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை யதார்த்தமானது அல்ல என்று விவரித்த சியோங், நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரங்கள் விவசாயத் துறைக்கு ஏற்றதல்ல, ஏனெனில் இது காய்கறிகளின் செழிப்பைப் பாதிக்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக, வேளாண்மை, உணவுத் துறை அமைச்சு மற்றும் கேமரன் மலை மாவட்ட மன்றத்திற்கும் (எம்.டி.சி.எச்) அவர் கடிதங்கள் எழுதியுள்ளார்.
“அரசு நிறுவனங்களின் பல்வேறு நிலைகள் குறித்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், குறிப்பாக எம்.டி.சி.எச்.
“ஒரு வருடத்திற்கும் மேலாக அரசாங்கம் இந்தத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகின்ற போதிலும், அவர்கள் விவசாயத் தொழிலுக்கு முறையான எஸ்.ஓ.பி.க்களை உருவாக்கத் தவறிவிட்டனர், கடந்த ஆண்டைப் போலவே, அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்,” என்று அவர் புலம்பினார்.
இந்தத் துறைக்கான இயக்க நேரத்தை அதிகாரிகள் மட்டுப்படுத்தினால், காய்கறிகளைப் பொட்டலமிடுதல் மற்றும் அனுப்பும் செயல்முறை நிச்சயமாக பாதிக்கப்படும் என்றார் அவர்.
“எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்குக் காய்கறிகளை அனுப்ப வேண்டுமென்றால், விவசாயிகள் மாலையில் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, இரவில்தான் அவற்றைப் பொட்டலம் கட்டுவார்கள்.
“பின்னர், நள்ளிரவில் அவை லாரிகளில் ஏற்றப்பட்டு, அதிகாலையில்தான் சந்தைக்கு அனுப்ப முடியும்.
“ஆனால், இப்போது விவசாயிகளும் வர்த்தகர்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடியும்.
“இது சந்தையில் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் வழங்கல் உள்ளிட்ட விநியோகச் சங்கிலியை நிச்சயமாக சீர்குலைத்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.
கேமரன் மலை மாவட்ட மன்றத் தலைவர் இஷாக் முகமச் நாபிஸ், தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) அமைத்துள்ள சமீபத்திய எஸ்ஓபிகளுக்கு ஏற்ப, கேமரன் மலையில் விவசாயத் துறை செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“ஆம் … என்.எஸ்.சி.யின் அறிவுறுத்தல்களின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (இயக்க நேரங்களை) பின்பற்ற வேண்டும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
வேளாண் துறைக்கு நெகிழ்வான இயக்க நேரம் கொடுக்கலாமா என்று கேட்டபோது, அவர்கள் என்.எஸ்.சி.யின் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றுவதாக இஷாக் சொன்னார்.
எவ்வாறாயினும், இந்தத் துறைக்கான இயக்க நேரங்களைச் சரிசெய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க, மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பையும் அவரது அலுவலகத்தையும் மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது, ஆனால் இதுவரை அவர்களுடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.