935,865 பேர் தடுப்பூசியின் 2 மருந்தளவுகளை நிறைவு செய்தனர் – ஆதாம்

நேற்றைய நிலவரப்படி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம், மொத்தம் 935,865 பேர் இரண்டு மருந்தளவு தடுப்பூசி மருந்துகளைத் பூர்த்தி செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

இன்று தனது கீச்சகக் கணக்கின் மூலம், நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 1,647,183 நபர்கள் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், இது நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவின் எண்ணிக்கையை 2,583,048 மருந்தளவாகக் கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.

இரண்டு மருந்தளவுகளை அதிகபட்சமாகப் பெற்ற ஐந்து மாநிலங்கள், சிலாங்கூர் (126,462), சரவாக் (92,261), கோலாலம்பூர் (90,514), ஜொகூர் (83,728) மற்றும் பேராக் (78,940) ஆகியவை என்று டாக்டர் ஆதாம் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, 45.60 விழுக்காடு அல்லது 11,069,418 நபர்கள் தடுப்பூசிகளைப் பெற பதிவு செய்துள்ளனர், சிலாங்கூர் தொடர்ந்து 2,916,443 பேர்களுடன் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைச் செய்துள்ளது.

நோய்த்தடுப்பு திட்டத்தின் படி, இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கிய முதல் கட்டத் தடுப்பூசியில், கடந்த ஏப்ரல் வரையில் சுகாதார ஊழியர்கள் உட்பட 500,000 முன்னணி ஊழியர்களை அது உள்ளடக்கியுள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இரண்டாம் கட்டத்தில், 9.4 மில்லியன் மூத்த குடிமக்கள், பாதிப்புக்கு அதிகம் உள்ளாகக்கூடிய குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உள்ளனர், மூன்றாம் கட்டத்தில், இந்த ஆண்டு மே முதல் 2022 பிப்ரவரி வரை திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் என, 13.7 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

  • பெர்னாமா