உணவகத்தின் இயக்க நேரம் குறைக்கப்பட்டது – நெட்டிசன்கள் ஏமாற்றம்

இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி. 3.0) கீழ், உணவகங்களின் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரங்கள் குறித்து நெட்டிசன்கள் மீண்டும் விரக்தியை வெளிப்படுத்தினர்.

அரசாங்கம் இப்போது உணவகங்கள் உட்பட, வணிகச் செயல்பாட்டு நேரங்களைக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்படுத்தியுள்ளது.

இது அமல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று, பல உணவகங்கள் இரவு 7.20 மணியளவில் மூடத் தொடங்கின.

பல நபர்கள் கீச்சகச் சமூக தளத்தைப் பயன்படுத்தி, அவர்களின் வேலை நேரம் காரணமாக, உணவை வாங்குவதற்கு விரைந்து செல்ல வேண்டியுள்ளது எனத் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.

“என் வேலை இரவு 8 மணிக்குதான் முடியும், ஆக எனது இரவு உணவை நான் எவ்வாறு பெறுவீர்கள்? ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் கிராப் மூலம் ஆர்டர் செய்யவா? நிச்சயமாக அவர்களுக்கு அதிக ஆர்டர்கள் இருக்கும், ஆக எனக்கு உணவு கிடைக்காது.

“ஆக, நான் மதிய உணவின் போதே உணவை வாங்க வேண்டுமா? குளிர்ந்த உணவை மீண்டும் சூடாக்கி உண்ண வேண்டுமா? ஒவ்வொரு நாளும் இப்படியே மீண்டும் மீண்டும் சூடாக்க வேண்டுமா? என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பினார்.

“பல முனைமுகத் தொழிலாளர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே தங்கள் வேலையைத் தொடங்கி இரவு 8 மணிக்குப் பிறகுதான் முடிக்க வேண்டும்,” என்ற மற்றொரு நெட்டிசன், “உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்தால், இவர்கள் என்ன சாப்பிடுவார்கள்? அனைத்து முனைமுக ஊழியர்களுக்கும் வீட்டில் குடும்பங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்களா?” என்றார்.

இதற்கிடையில், நேற்று தனது பணியை முடித்த பின்னர் உணவு தேடிய ஒருவர், “இரவில் என்ன கிடைக்கும்? ஒன்றுமில்லை. எல்லாம் மூடப்பட்டுள்ளது,” என்றார்.

“உணவகங்கள் மூடப்பட்டதால், உணவு விநியோக சேவைகளும் இல்லை.

இருதயநோய் நிபுணர் டாக்டர் பெனி ருசானி தனது கீச்சகத்தில் : “மருத்துவமனை சிற்றுண்டிச்சாலை காலை 8 மணிக்குத் தொடங்குவது கடினமாக உள்ளது. முன்னதாகத் திறக்கப்பட்டால், நான் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு சாப்பிட்டுவிடலாம்,” என்றார்.

சில கீச்சகப் பயனர்கள், மருந்தகத்தின் இயக்க நேரங்களை இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுவதைக் கேலி செய்தனர்.

“இரவு 8 மணிக்குப் பிறகு நீங்கள் பசியுடன் இருந்தால், மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று அவர்கள் கூறினர்.

கடந்த சனிக்கிழமையன்று, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பி.கே.பி.யை இறுக்குவதற்கு பல நடவடிக்கைகளை அறிவித்தார், இதில் வணிக நேரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பணியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும்.