மலேசியத் தேசியப் பொது பாதுகாப்பு படையின் (ஏபிஎம்) கேப்டனும் (பி), நகைச்சுவை நடிகருமான ஆர் இராமசுந்திரன், 57, இன்று அதிகாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்) காலமானார்.
இவர் ஸ்பானர் ஜெயா மலாய் நாடகம் மூலம் மக்களிடையே பிரபலமானவர்.
இராமசுந்திரனின் மனைவி தொலைபேசியில் அழைத்து தனக்குச் செய்தி சொன்னதாக, மலேசிய நாடகச் சங்கத்தின் தலைவர் சக்ரானி சம்சுதீன், தெரிவித்தார்.
அச்சங்கத்தின் துணைத் தலைவரானா இராமசுந்திரன், கால் வீக்கம் காரணமாக், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் எச்.கே.எல். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இதயநோய் பிரச்சினைகள் கொண்டிருந்த இராமசுந்திரன் இறந்துவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்தியதாக சக்ராணி சொன்னார்.
“அவரது ஆத்மா அமைதி பெறட்டும். மலேசிய நாடகச் சங்கத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இராமசுந்திரன் நடித்த படங்களில், கெர்ஜா காவின், சினி அடா ஹந்து , அகூ காயா தி மூவி மற்றும் சிந்தா 200 ஏலா ஆகியவையும் அடங்கும்.
- பெர்னாமா