எல்.ஆர்.டி. விபத்து: ‘மனித அலட்சியம்’ தவிர வேறு காரணத்தையும் ஆராய்வோம் – வீ

திங்களன்று நிகழ்ந்த எல்.ஆர்.டி. விபத்து தொடர்பான விசாரணையில், “மனித அலட்சியம்” தவிர வேறு காரணிகளையும் ஆராய்வோம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.

“மே 24-ம் தேதி, கிளானா ஜெயா எல்ஆர்டி இரயில்கள் இரண்டு சம்பந்தப்பட்ட விபத்துக்கு, ‘மனித அலட்சியம்’ தான் காரணம் என்று பரவி வரும் கருத்தைப் போக்குவரத்து அமைச்சு விரிவாக ஆராய்கிறது.

“இது துல்லியமானது அல்ல. விசாரணையில் ‘மனித அலட்சியம்தான் காரணம்’ என்பது ஓர் அம்சம் மட்டுமே என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஏனென்றால் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணிகள் பலவும் ஆராயப்படுகின்றன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கே.எல்.சி.சி. நிலையம் மற்றும் கம்போங் பாரு நிலையம் இடையே நிலத்தடி சுரங்கப்பாதையில் இரண்டு இரயில்கள் மோதியதில், இரயிலைக் கைமுறையாகக் கட்டுப்படுத்துவதில், ஓட்டுநரின் தரப்பில் “அலட்சியம்” என்ற ஒரு கூறு இருப்பதைக் கண்டறிந்ததாக நேற்று வீ கூறினார்.

பயணிகள் இல்லாத திஆர்240 இரயில், தவறான திசையில் சென்று, திஆர்181 இரயிலுடன் மோதியுள்ளது என நிலப் பொது போக்குவரத்து நிறுவனம் (அபாட்) கண்டறிந்துள்ளது.

பொதுமக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், விசாரணைக் குழுவிற்குத் தங்கள் கடமைகளைச் செய்ய இடம் கொடுக்க வேண்டும் என்றும் வீ கேட்டுக்கொண்டார்.

இக்குழுவுக்குப் போக்குவரத்து அமைச்சின் பொதுச்செயலாளர் இஷாம் இஷாக் தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட ஆறு பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வீ கூறினார், மூன்று பேர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் 213 பயணிகள் பாதிக்கப்பட்டனர், அவர்களில் 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.