பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இது உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இது நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் பல பொது போக்குவரத்து வலைபின்னல்களை வைத்திருக்கும் பிரசரனாவின் ஒரே பங்குதாரர் நிதி அமைச்சர்.
இதில், கடந்த திங்களன்று இரண்டு எல்ஆர்டி இரயில்களுக்கு இடையிலான விபத்து ஏற்பட்ட கிளானா ஜெயா எல்ஆர்டி வழிதடமும் அடங்கும் – இதன் விளைவாக 64 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் – அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
தாஜுட்டினுக்கு ஜஃப்ருல் எழுதியக் கடிதம், நேற்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடையே பரவியது.
“பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் தலைவராக, மாண்புமிகு டத்தோஶ்ரீ அவர்களின் சேவை நிறுத்தப்படுகிறது, இது உடனடியாக நடைமுறைக்கு வருவதை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டார் என்பது இதன்வழி தெரிவிக்கப்படுகிறது,” என்று தாஜுடினுக்கு அனுப்பப்பட்டக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு கொண்டபோது, நிதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அக்கடிதத்தை உறுதிப்படுத்தினார்.
அண்மையில் எல்ஆர்டி விபத்து குறித்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது, தாஜுட்டினின் அறிக்கை பல விமர்சனங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தச் சேவை பணிநீக்கக் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று தாஜுட்டின் கூறியதாக மலாய் மெயில் மேற்கோள் காட்டியுள்ளது.
“இன்னும் வரவில்லை. முடித்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் முடித்துகொள்ளுங்கள். அதில் என்ன பிரச்சினை? நீங்கள் முடிக்க விரும்பினால் முடித்துகொள்ளுங்கள். நன்றி. மற்ற வேலைகளை என்னால் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.
கடந்த செவ்வாயன்று, எல்ஆர்டி விபத்து நடந்த இடத்தின் நிலைமை குறித்த ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளித்தபோது, தாஜுட்டின் “அது இயல்பானது … இரண்டு இரயில்கள், ஒன்றோடொன்று முத்தமிட்டுக்கொண்டன …,” என்று கூறிவிட்டு, சின்னதாக சிரிப்பை வெளிபடுத்தினார்.
இது தவிர, விபத்து நடந்த இரவு, அவ்விடத்தில் அவர் இல்லாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது தாஜுட்டின் கூறிய பதில் சமூக ஊடகங்களிலும் விமர்சனங்களைப் பெற்றது.
அவர் கூறிய “காலையில் முதல் விஷயம்”என்ற பதிலால் பெரும்பாலானோர் அதிருப்தி அடைந்தனர்.
தாஜுட்டின் சம்பவத்தன்று விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் செல்லவில்லை, அதற்குக் காரணம் அவருக்கு ஒரு கூட்டம் இருந்ததாகவும், மேலும் மறுநாள் தான் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவைப் பெற தயாராக வேண்டியிருந்ததாகவும் அவர் சொன்னார்.
பத்திரிகையாளர் சந்திப்பை தாஜுட்டின் கையாண்ட விதம், பிரசாரனாவிலிருந்து விலகுமாறு அழைப்பு விடுக்க தூண்டியுள்ளது.
நேற்றய முன் தினம் இரவு 7.30 நிலவரப்படி, தாஜுடினைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுவில் 130,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் இருந்தன.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது முகக்கவரி அணியாதது குறித்தும் தாஜுட்டின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.