‘செயல்பாட்டில்’ இல்லாத 7 அமைச்சர்கள் – அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பட்டியலிட்டார்

நாடு கோவிட் -19 தொற்றை எதிர்கொண்டதால், தங்கள் பங்கை வகிக்கத் தவறிய ஏழு அமைச்சர்களை, அம்னோ உச்சமன்றத் தலைவர் ஒருவர் இன்று பட்டியலிட்டு காட்டினார், அவர்களில் பெரும்பாலானோர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள்.

சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர்கள், தொற்றுநோயைச் சமாளிக்க திறம்பட செயல்படத் தவறியதாகக் காணப்படுவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இரஸ்லான் ரஃபி தெரிவித்தார்.

செயல்படத் தவறிய ஏழு அமைச்சர்கள் என அவர் பட்டியலிட்டவர்களில், கிராமப்புற விவகார அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீஃப் அகமது; மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரினா ஹருன்; கல்வி அமைச்சர், ராட்ஸி ஜிடின்; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர், நான்சி சுக்ரி; வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஸுரைடா கமருட்டின்; உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோர் உள்ளனர்.

நான்சி குறித்து கூறுகையில், அவர் சம்பந்தப்பட்ட அமைச்சில் ஒரு திரளை கண்டறியப்பட்டபோதிலும், அந்தப் பதாங் சாடோங் எம்.பி. களத்தில் இறங்கவில்லை, அமைச்சர் ஏன் அதனைக் “கைவிட்டார்” என்பதை அறிய விரும்புவதாக இரஸ்லான் கூறினார்.

கெந்திங் மலையில் நடந்ததைப் போன்ற பல பிரச்சினைகள் எழும்போது, வெறுமனே கைகட்டி நிற்காமல், சுற்றுலாக் குமிழியின் செயல்பாட்டை நான்சி தானே உன்னிப்பாகக் கவனித்து, நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்று இரஸ்லான் கூறினார்.

“இது சுற்றுலா அமைச்சின் பொறுப்பின் கீழ் இல்லையா?” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

அஸ்மினைப் பொறுத்தவரை, கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்த பல தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டபோது, அந்த கோம்பாக் எம்.பி. அமைதியாக இருந்தார் என்று இரஸ்லான் கூறினார்.

“ஏன் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று, நிலைமையை நீங்களேப் பார்க்கக்கூடாது? நீங்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது, ​​நாட்டிற்குள் பணம் எங்கே கொண்டு வரப்பட்டது? நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவரும் பொறுப்பைக் காட்டிலும், படங்கள் எடுப்பதுதான் (தரையைத் துடைப்பது) முக்கியமா?” என அஸ்மினின் சமீபத்திய உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை அவர் குறிப்பிட்டார்.

கோவிட் -19 அச்சுறுத்தல் முடிவடையவில்லை

ஹம்ஸாவைப் பொறுத்தவரை, செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய, லாருட் எம்.பி. தவறிவிட்டதாக இரஸ்லான் குற்றம் சாட்டினார்.

“விசித்திரக் கதைகளைப் போல, எஸ்.ஓ.பி.யைக் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட பல திரளைகள், ஆனால் அவற்றிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கேலி கூத்தானது,” என்று அவர் கூறினார்.

பிரதமர் முஹைதீன் யாசின், முகக்கவரி அணியத் தவறியபோது, ​​பெர்சத்து பொதுச் செயலாளருமான ஹம்சா, அதிகாரிகள் பிரதமர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யத் தவறிவிட்டார், அதே நேரத்தில் சாதாரண மக்கள் விதிகளை மீறினால் ஆயிரக்கணக்கான ரிங்கிட் தண்டம் விதிக்கப்படுகிறது என்று இரஸ்லான் மேலும் கூறினார்.

தடுப்பூசிக்குப் பதிவு செய்ய, நாடு முழுவதும் மக்களை ஊக்குவிக்க தவறிய கிராமத் தலைவர்களுக்காக, இரஸ்லான் அப்துல் லத்தீப் மீது குற்றம் சாட்டினார்.

மறுபுறம், தன்னார்வத் தொண்டு நிறுவனமான பெங்கெராக் நெகாரா-வின் நடவடிக்கைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, கோவிட் -19 அச்சுறுத்தலை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவரான ஸுரைடா கொடுக்கவில்லை என்று இரஸ்லான் கூறினார்.

“அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குச் செலவழிக்கும் பணத்தை, மக்களைத் தடுப்பூசிகளுக்குப் பதிவு செய்ய உதவ ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகத்தை நிர்வகிக்க தவறியதாக, முஹைடின் யாசினின் அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான ராட்ஸி மீதும் இரஸ்லான் குற்றம் சாட்டினார்.

“மாணவர்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட் -19 நெருக்கடியில், ஒவ்வொரு அமைச்சையும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வழிநடத்துவதன் மூலம் முஹைதீன் ஒரு சிறந்த அரசாங்கத் தலைவராகச் செயல்பட வேண்டும் என்று இரஸ்லான் சொன்னார்.

“கோவிட் -19 நெருக்கடியில் கவனம் செலுத்த, ஒவ்வொரு அமைச்சிற்கும் அறிவுறுத்தப்பட வேண்டும், நாட்டின் பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது, நாட்டின் மேம்பாட்டிற்கான பட்ஜெட் முடிந்துவிட்டது.

“கோவிட் -19 அச்சுறுத்தல் முடிவடையாதபோது, இப்போது விநியோகிக்கப்படும் திட்டங்களினால் பயன் என்ன?” என்று அவர் கேட்டார்.