சீனத் தூதரகம் : வழக்கமான பயிற்சிகள்தான், எந்த நாடும் குறிவைக்கப்படவில்லை

மலேசிய வான்வெளியில், சந்தேகத்திற்குரிய 16 சீன இராணுவ விமானங்களை அரச மலேசிய விமானப்படை (தி.யு.டி.எம்.) தடுத்து நிறுத்தியச் சம்பவத்தைத் தொடர்ந்து, சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், விமானங்கள் பயிற்சிக்கு உட்பட்டுள்ளன என்றும், எந்த நாடும் குறிவைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

“எனக்குத் தெரிந்தவரை, அறிவிக்கப்பட்ட அச்செயல்பாடு வழக்கமான சீன விமானப்படையின் விமானப் பயிற்சி மட்டுமே, எந்த நாட்டையும் அது குறிவைக்கவில்லை.

“தொடர்புடைய சர்வதேசச் சட்டத்தின்படி, சீன இராணுவ விமானம் சம்பந்தப்பட்ட வான்வெளியில் சுதந்திரமாக குறுக்கே பறக்கலாம். இந்தப் பயிற்சியின் போது, ​​சீன இராணுவ விமானம் பொருந்தக்கூடிய சர்வதேசச் சட்டத்திற்கு இணங்கியுள்ளது, மேலும் பிற நாடுகளின் பிராந்திய வான்வெளியில் நுழையவில்லை,” என்று அச்செய்தித் தொடர்பாளர் நேற்று மதியம் கூறினார்.

அச்செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், சீனாவும் மலேசியாவும் நட்பு அண்டை நாடுகளாகும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பராமரிக்க, மலேசியாவுடன் இருதரப்பு நட்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர சீனா தயாராக உள்ளது.

அந்த ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம் அளிக்க, மலேசியாவிற்கான சீன மக்கள் குடியரசின் தூதரை மலேசியா அழைக்கும் என்று வெளியுறவு அமைச்சு கூறியதற்கு முன்னதாக இந்த அறிக்கை வந்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன், இந்த விஷயத்தில் மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, எந்தவொரு நாட்டினருடனும் நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை வைத்திருப்பது தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று அர்த்தமல்ல.

“தி.யு.டி.எம்.-இலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், வெளியுறவு அமைச்சு ஆக்கிரமிப்புக்கு எதிரான இராஜதந்திர எதிர்ப்பு குறிப்பைச் சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கு வெளியிடும்.

“16 பி.எல்.ஏ. விமானப்படை விமானங்களால், மலேசிய வான்வெளியையும் இறையாண்மையையும் மீறியது குறித்து விளக்கம் அளிக்க, சீனக் குடியரசின் தூதரை அமைச்சு மலேசியாவிற்கு வரவழைக்கும்,” என்று ஹிஷாமுதீன் நேற்று தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சபா, கோத்த கினாபாலு, மலேசியக் கடல் பரப்பின் வான்வெளியில் பறந்த 16 சீன இராணுவ விமானங்களை தி.யு.டி.எம். தடுத்ததாகக் கூறப்படுகிறது.

தி.யு.டி.எம். தளபதி ஜெனரல் அக்பல் அப்துல் சமாட், சீன விமானப்படை விமானம் நாட்டின் வான்வெளியில் நுழைந்தச் சம்பவம், தேசிய இறையாண்மை மற்றும் விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான தீவிரமான விடயம் என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தைக், குறிப்பாக தி.யு.டி.எம். மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் (ஏ.தி.எம்) சர்வதேச சிவில் விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) மற்றும் தேசிய வான் பாதுகாப்பு வியூகம் (எஸ்.பி.யு.என்.) ஆகியவற்றின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கையாண்டதாக அக்பால் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு, தேசியத் தலைமை தணிக்கையாளர் அறிக்கை (கே.ஏ.என்.) தொடர் 3, சீனக் கடலோரக் காவல்படை (சி.சி.ஜி.) மற்றும் சீன மக்கள் விடுதலை கடற்படை (பிளான்) ஆகியவற்றின் கப்பல்கள் 2016 மற்றும் 2019-க்கு இடைபட்டக் காலகட்டத்தில், 89 முறை மலேசியக் கடலில் அத்துமீறி நுழைந்தது பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துமீறிய நுழைவு தொடர்பாக, நாம் அனுப்பிய எதிர்ப்புக் குறிப்பைச் சீன அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்றும் நாட்டின் தணிக்கைத் தலைவர் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கையின்படி, சி.சி.ஜி. மற்றும் பிளான்-இன் வருகை, தென் சீனக் கடலுக்கான சீனாவின் கோரிக்கைகளை, குறிப்பாக மிரி, சரவாக் கடற்கரையிலிருந்து சுமார் 84 கடல் மைல் தொலைவில் உள்ள, சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து சுமார் 1,600 கி.மீ தூரத்தில் உள்ள பெதிங் பாத்திங்கி அலி பகுதிக்கான கோரிக்கையை நிரூபிப்பதாக இருக்கிறது.