பந்துவான் சாரா ஹிடூப் அல்லது பந்துவான் ப்ரிஹத்தின் ராக்யாட்டில் பதிவுசெய்துள்ள பி40 வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் கடன் ஒத்திவைப்பு வழங்கப்படும் என்று மலேசிய வங்கிகள் அமைப்பு (ஏபிஎம்) தெளிவுபடுத்தியது.
கடன் ஒத்திவைப்பு தற்காலிகமாக வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே என்ற, நேற்றைய அறிக்கைக்குப் பின்னர் இந்த விளக்கம் வந்துள்ளது.
நேற்றைய அறிக்கையில், இரண்டு வகை நிவாரணங்கள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது : (1) மூன்று மாதக் கால கடன் ஒத்துவைப்பு அல்லது ஆறு மாதங்களுக்கு மாதாந்திரத் திருப்பிச் செலுத்துதலை 50 விழுக்காடு குறைத்தல் மற்றும் (2) திருப்பிச் செலுத்துவதில் குறைப்பு.
முதல் வகை வேலை இழந்தவர்களுக்கு, இரண்டாவது வகை கடன் வாங்கியுள்ள பி40 குழுவினர் மற்றும் முழு கதவடைப்பின் போது மூட உத்தரவிடப்பட்டுள்ள மைக்ரோ நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (எஸ்எம்இ) ஆகியவற்றுக்கு எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு விளக்கத்தில், மேற்கண்ட அனைத்து வகையினரும் கடன் ஒத்திவைப்புக்குத் தகுதி பெறலாம் என ஏபிஎம் தெரிவித்தது.
“மூன்று மாதக் கால தடை அல்லது ஆறு மாதங்களுக்கு மாத தவணைகளில் 50 விழுக்காடு குறைப்பு என்பது வேலை இழந்தவர்களுக்கு மட்டுமல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில் அது தெரிவித்தது.
பின்வரும் வகைகளுக்குக் கடன் ஒத்திவைப்பு வழங்கப்படும் என்று ஏபிஎம் தெளிவுபடுத்தியது :
1) நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது செயல்பட அனுமதிக்கப்படாத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (எஸ்எம்இ);
2) நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது செயல்பட அனுமதிக்கப்படாத மைக்ரோ-நிறுவனங்கள்;
3) பந்துவான் சாரா ஹிடூப் (பி.எஸ்.எச்) அல்லது பந்துவான் ப்ரிஹத்தின் ராக்யாட் (பிபிஆர்) பெறும் பி40 குழுவினர்.