கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட சமீபத்தியப் பொருளாதார உதவிகளில் (பெர்மெகாசா பிளாஸ்) எம்40 நடுத்தர வருமானக் குழுவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
RM5,000-க்கு மேல் வீட்டு வருமானம் கொண்ட, நடுத்தர 40 விழுக்காட்டினர் (எம்40) அந்தத் துணை தூண்டுதல் தொகுப்பிலிருந்து பயனடைய எதுவுமில்லை என்று நஜிப் கூறினார்.
எம்40 குழுவிற்கு, பந்துவான் ப்ரிஹத்தின் ரக்யாட், கடன் ஒத்திவைப்பு, ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்தாரி, மின்சாரக் கட்டண விலக்கு மற்றும் இலவச ஆஸ்ட்ரோ சேனல்கள் அல்லது தேசிய உயர்க்கல்வி நிதி கடன் ஒத்திவைப்பு என எந்தவொரு உதவியும் கிடையாது என்று அந்தப் பெக்கான் எம்.பி. சொன்னார்.
“இந்த முறை எம்40 குழுவினருக்கு என்ன உதவி வழங்கப்பட்டது? ‘முழு கதவடைப்பு காலத்தில்’ செயல்பட, இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட 95,142 நிறுவனங்களைத் தவிர,” என்றார் அவர்.
கடந்த திங்கட்கிழமை, பிரதமர் முஹைதீன் யாசின் ‘முழு கதவடைப்பால்’ பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகச் சமூகங்களுக்கு உதவ RM40 பில்லியன் மதிப்புள்ள கூடுதல் பொருளாதார உதவிகளை அறிவித்தார்.
சமீபத்தியப் பொருளாதார உதவி, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த பொது சுகாதாரத் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.