தற்போதைய ஆய்வின் அடிப்படையில், நாட்டில் கோவிட் -19 தொற்று இறப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்திற்குள் 26,000-ஐ எட்டும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பின் அறிவியல் கவுன்சில் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தெரிவித்தார்.
மதிப்பிடப்பட்ட அந்த எண்ணிக்கை, இன்றைய 2,993 இறப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் குறைந்தது ஒன்பது மடங்கு ஆகும்.
வாஷிங்டன் பல்கலைக்கழகச் சுகாதார மெட்ரிக் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.எச்.எம்.இ.) மேற்கொண்ட ஆய்வில், ஆகஸ்ட் இறுதிக்குள் தினசரி இறப்பு விகிதம் 200-ஐ எட்டும் என்று மதிப்பிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
“இதய நோய்க்குப் பிறகு, மலேசியாவில் அதிக இறப்புக்குக் கோவிட் -19 காரணியாக இருக்கும்,” என்று, தேசிய ஊடகவியலாளர் ஜோஹான் ஜாஃபர், இன்று தொகுத்து வழங்கிய சினார் ஹரியான் நிகழ்ச்சி ஒன்றில் அந்தத் தொற்று நோய் வல்லுநர் சொன்னார்.
ஐ.எச்.எம்.இ. அதன் இணையதளத்தில், தொற்று தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட இறப்பு மாற்றத்தின் ஆறு இயக்கிகளை மதிப்பீடு கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
கோவிட் -19 நோய்த்தொற்றுடன் நேரடியாக தொடர்புடைய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை, சுகாதார தாமதங்களால் இறப்புகளின் அதிகரிப்பு, அதிகரித்த மனநலக் கோளாறுகள் காரணமாக இறப்புகளின் அதிகரிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் காயப்படுவோரின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைதல் ஆகியவையும் அதில் அடங்கும்.
அதுமட்டுமின்றி, இருதய நோய்கள் போன்ற சில நாட்பட்ட நோயினால் பலவீனமானவர்கள் கோவிட் -19 காரணமாக முன்னதாகவே இறக்க நேரிடலாம்.
மலேசிய எய்ட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் அடீபா, கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவது என்பது ஒரு மிக முக்கியமானப் போர்க்களமாகும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முழு கதவடைப்புடன் அனைத்து மலேசியர்களையும் இணைத்து எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை என்று வலியுறுத்தினார்.
“இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி), நாம் சிந்தித்து, திட்டங்களை உருவாக்கி, மறுசீரமைக்க பயன்படுத்த வேண்டும். தடுப்பூசியை முழுமையாகச் செயல்படுத்த காத்திருக்கும் போது, இத்தொற்றில் இருந்து உண்மையில் விடுபட ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். நம்மால் பி.கே.பி. 5.0-ஐ எதிர்கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை.
“மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் உயர் தலைமை பொறுப்பேற்க வேண்டும், நம்பிக்கை என்பது பொது சுகாதாரத்தின் நாணயமாகும் … வேண்டுமானாலும் இல்லாவிட்டாலும், முந்தைய பி.கே.பி.யின் போது பெற்ற நம்பிக்கையை அரசாங்கம் மீண்டும் பெற வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
- பெர்னாமா