1எம்டிபி : அரசாங்கம் RM336 மில்லியன் பண வழங்கீடைப் பெற்றது

தணிக்கை நிறுவனமான டெலாய்ட் பிரைவட் லிமிடெட், சொத்துக்கள் மீட்பு அறக்கட்டளை கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளதால், அரசாங்கம் RM336 மில்லியன் (80 மில்லியன் அமெரிக்க டாலர்) பண வழங்கீடைப் பெற்றுள்ளது என நிதி அமைச்சு அறிவித்தது.

செலுத்தப்பட்ட அந்தப் பணம், 1எம்டிபி தொடர்பான விஷயங்களில் கைப்பற்றப்பட்ட நிதி என்று நிதியமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இன்றுவரை, அறக்கட்டளை கணக்கு – பொது கணக்காளர் துறையின் மேற்பார்வையின் கீழ் – 1எம்டிபி தொடர்பாக மொத்தம் RM16.386 பில்லியன் நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி. ஆகியவற்றின் நிலுவைத் தொகையைத் தீர்க்க அறக்கட்டளை கணக்கில் உள்ள தொகை பயன்படுத்தப்படும்.

“இந்த நிலுவைத் தொகை, RM2.83 பில்லியனின் மொத்தத் தீர்வைக் கொண்டிருக்கவில்லை, அது விரைவில் அம்பேங்க் குழுமத்திலிருந்து பெறப்படும்,” என்று அது கூறியது.

இது தவிர, கே.பி.எம்.ஜி.யுடன் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

“இதுவரை, 1எம்டிபி கடனில் RM12.54 பில்லியனையும், எஸ்.ஆர்.சி. கடனில் RM3.1 பில்லியனையும் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

“மே 31, 2021 நிலவரப்படி, அசல் மற்றும் கூப்பன்கள் / இலாபங்கள் / ஒப்பந்தங்கள் மீதான வட்டி, சுகுக் (இஸ்லாமிய நிதி சான்றிதழ், ஷரியா சட்டத்திற்கு இணங்கியது) மற்றும் கால கடன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலுவைக் கடன் RM39.66 பில்லியன் (1எம்டிபி) மற்றும் RM2.57 பில்லியன் (எஸ்.ஆர்.சி.) ஆகும்,” என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸீஸை மேற்கோள் காட்டி அந்த அறிக்கையில், அறக்கட்டளை கணக்கின் தற்போதைய இருப்பு 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கான 1எம்டிபியின் கடனின் அசல் மற்றும் வட்டியை அடைக்க மட்டுமே போதுமானது என்று கூறியுள்ளது.

“அனைத்து அறக்கட்டளை கணக்கு நிதிகளும் பயன்படுத்தப்பட்டவுடன், இந்தக் கடன்களின் நிலுவைத் தொகையை அரசாங்கம் ஏற்க வேண்டும், காரணம் 1எம்டிபி கடன்கள் வழங்கப்பட்டபோது, அரசாங்கம் அதற்கு உத்தரவாதமும் ஆதரவு கடிதமும் வழங்கி ஆதரித்துள்ளது.”

“அறக்கட்டளை கணக்கில் மீட்டெடுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் பயன்படுத்தப்பட்டவுடன், 1எம்டிபி கடன் சுமையை அரசாங்கம் தொடர்ந்து சுமக்க வேண்டியிருக்கும்,” என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி.-இன் சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள், தற்போது 1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி.க்கு இழப்புகளை ஏற்படுத்திய தரப்பினர் மீது கவனம் செலுத்துகின்றது என நிதியமைச்சு மேலும் சொன்னது.

இது 1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி.-இன் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளில் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடு கொண்டவர்கள், அதே போல் தொண்டு நடவடிக்கைகள் என (சிஎஸ்ஆர்) வேடமிட்ட எஸ்ஆர்சி பணத்தைப் பெற்றவர்கள் போன்றோர் இதில் அடங்குவர் என அது தெரிவித்தது.

“1எம்டிபி மற்றும் / அல்லது எஸ்.ஆர்.சி.-இல் ஈடுபட்டதன் வழி, சம்பந்தப்பட்ட அனைவரும் தவறான நடத்தைக்கு முழு பொறுப்புக்கூறப்படுவார்கள்,” என்று அது மேலும் கூறியது.