அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மெய்நிகரில் நடத்த வேண்டும் என்று கோரியதோடு, இஸ்தானா நெகாரா வழியாக அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்.
“இந்த முறை, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மெய்நிகர் அமர்வாக நடைபெறும் என்று யாங் டி-பெர்த்துவான் அகோங் அறிவிக்க முடியாதா?” என்று அவர் இன்று முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.
மெய்நிகர் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான பரிந்துரைக்கு, மக்களவை சபாநாயகர் அஸார் ஹருன் அளித்த பதில் குறித்து தனது அதிருப்தியைக் காட்ட அந்த முன்னாள் அம்னோ எம்.பி.யின் அறிக்கை வெளியிடப்பட்டது.
முன்னதாக, ஒரு மெய்நிகர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நாட்டில் நடத்துவதற்கு முன்னர், சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அஸார் கூறியுள்ளதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.
கோவிட் -19 நோய்தொற்றை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று அஸாரின் துணைத் தலைவர் அஸலினா ஓத்மான் சைட் உட்பட பல அம்னோ தலைவர்கள் பரிந்துரைக்கும் வேளையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
மொஹமட் புவாட்டின் கூற்றுப்படி, மக்களவை மெய்நிகர் அமர்வு அரசியலமைப்பு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதால் அதை அப்படியே நடத்த முடியாது என்று அஸார் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் படி, எம்.பி.க்கள் மக்களவையில் உடல் ரீதியாக இருக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் என்றார்.
“அவசரகாலத்தின் கீழ், நாடாளுமன்றக் கூட்டங்களை மெய்நிகரில் நடத்த அனுமதிக்கும் ஒரு கட்டளையை அரசாங்கத்தால் அறிவிப்பு செய்ய முடியாதா?” என்று மொஹமட் புவாட் கேள்வி எழுப்பினார்.
அவரைப் பொறுத்தவரை, இதற்கு முன்பே, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாமல், செலவினங்களை அதிகரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகள் உட்பட பல்வேறு அரசிதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“ஒரு மெய்நிகர் கூட்டத்தைக்கூட நடத்த முடியாவிட்டால், தேசியக் கூட்டணி அரசாங்கம் ‘மெய்நிகர் உலகில்’ ஆட்சி செய்வதுதான் நல்லது. கதவு எதுவும் தேவையில்லை,” என்று அவர் அந்த முகநூல் பதிவில் கேலி செய்துள்ளார்.