முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) வாகனங்களில் தனிநபர்களின் எண்ணிக்கை வரம்பு உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழிகாட்டுதல்கள் குழப்பத்தை எழுப்பியுள்ளன என மலேசிய விமான நிலைய லிமோசைன் மற்றும் வாடகைக் கார் சங்கம் (ஜி.தி.எஸ்.எம்) கூறியுள்ளது.
ஜி.தி.எஸ்.எம் தலைவர் கமருட்டின் மொஹட் ஹுசைன் கருத்துப்படி, எஸ்ஓபி-க்களுக்கும் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன.
கமருட்டின் கூறுகையில், போக்குவரத்து அமைச்சு மற்றும் நிலப் பொது போக்குவரத்து நிறுவனம் (அபாட்) அமைத்துள்ள எஸ்ஓபி படி, ஒரு பயணியை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
இதன் பொருள், ஓட்டுநர் உட்பட ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே வாகனத்தில் இருக்க முடியும். மருத்துவ மற்றும் சுகாதார விஷயங்களில் சம்பந்தப்பட்டால் விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன, அங்கு ஓட்டுநர் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
“ஆனால், தேசியக் காவற்படைத் தலைவர் (ஐஜிபி) பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு நேரத்தில் நாங்கள் மூன்று பேரை எங்கள் வாகனத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாகச் சொன்னார், அதாவது ஓட்டுநர் ஒருவர் மற்றும் இரண்டு பயணிகள்.
“இது ஒரு கொந்தளிப்பையும் குழப்பமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி ஓட்டுநர்கள் மற்றும் சங்கங்களிடமிருந்து பல அழைப்புகளை நான் பெற்றுள்ளேன்.
“இது தொடர்பாக, நாங்கள் அரசாங்கத்திடம் முறையிட விரும்புகிறோம், தயவுசெய்து நாங்கள் எந்த எஸ்.ஓ.பி.யைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை ஐ.ஜி.பி அக்ரில் சானி அப்துல்லா சானியின் செய்தியாளர் சந்திப்பை அவர் குறிப்பிட்டார்.
எம்.கே.என். எஸ்.ஓ.பி.-இல், ஒரு வாகனத்தில் மூன்று பேர் சிகிச்சை, சுகாதார சேவைகள், பாதுகாப்பு அல்லது அவசரகால விஷயங்களுக்காக அனுமதிக்கப்படுகிறார்கள், மூவர் என்பதில் நோயாளியும் அடங்குவர்.
இருப்பினும், தடுப்பூசி தொடர்பான பயணங்களுக்கு இந்த விதி பொருந்துமா இல்லையா என்று அது குறிப்பிடவில்லை.
தெளிவுபெற மலேசியாகினி பாதுகாப்பு அமைச்சையும் காவல்துறையையும் அணுகியது.
இச்செய்தியை எழுதும் நேரத்தில், அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், போக்குவரத்து அமைச்சின் விளக்கப்படம் மூலம் பதிலளித்தார், அனைத்து வாடகைக் கார்களும் ஒரு பயணியை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாகக் கூறினார்.
இருப்பினும், மருத்துவ விஷயங்கள், தடுப்பூசிகள் மற்றும் அவசரநிலைகளுக்கு, வாடகைக் கார்கள் இரண்டு பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படுகின்றன.