மூத்த அமைச்சர் முகமது அஸ்மின் அலியைப் பதவி விலகுமாறு வலியுறுத்தும் ஆன்லைன் பிரச்சாரம், நெட்டிசன்களின் 100,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.
150,000 கையெழுத்துகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, www.change.org தளத்தில் ‘தோல்வியுற்ற அரசு’ (Kerajaan Gagal) என்றப் பெயரில், ஒரு மெய்நிகர் பயனரால் #AzminLetakJawatan (அஸ்மின் பதவி விலகுங்கள்) என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் பிரச்சார மனு நேற்று தொடங்கப்பட்டது.
காலை 10.56 மணிக்குப் புதுப்பிக்கப்பட்ட இந்தச் செய்தியின் படி, மனுவில் 101,000 கையொப்பங்கள் நெட்டிசன்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன.
“ஒரே ஒரு காரணம் : எதிர்பார்த்த மூத்த அமைச்சராகச் செயல்படத் தவறியது. புள்ளி” (“Hanya satu sebab: gagal berfungsi sebagai menteri kanan yang diharapkan. Titik,”) என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் (மிட்டி) பொறுப்பாளரான அஸ்மின், பி.கே.பி. முழு கதவடைப்பின் போது, தேவையற்றச் சேவை நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளார் என்றக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டார்.
நேற்று காலை நிலவரப்படி, 586,308 விண்ணப்பதாரர்களில் 128,150 பேருக்கு ‘முழு கதவடைப்பின்’ போது செயல்பட மிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
எவ்வாறாயினும், சிம்ஸ் 3.0 மீறப்பட்டதாகவும், செயல்பட அனுமதிக்கப்படாத சில துறைகள் இருந்தபோதிலும், அவை ஒப்புதல் பெற்றதாகவும் கூறிய பல தரப்பினரின் புகார்களை மிட்டி கவனித்ததாக அஸ்மின் நேற்று தெரிவித்தார்.
தற்போதைய முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில், செயல்பட அனுமதி அளிக்கும் ஒரே தரப்பு மிட்டி மட்டுமல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
நேற்று, புத்ராஜெயா மலேசியாகினி வட்டாரங்கள், முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்மாயிலுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தன.
தற்போதைய பி.கே.பி. உத்தரவின் போது செயல்பட அனுமதி கோருவதற்கான விண்ணப்பங்களைக் கட்டுப்படுத்த, மிட்டியின் கடைசி நிமிட நடவடிக்கையிலிருந்து பதற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, பி.கே.பி. காலத்தில் இஸ்மாயில் சப்ரி மூட உத்தரவிட்ட மதுபான நிறுவனங்கள் செயல்படுவதாக மற்றொரு ஆதாரம் கூறியது.