நேற்று, புலம்பெயர்ந்தோர் உரிமைகளை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஆவணமற்றப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஆவணங்களைப் பெறுவதற்குப் பணியாற்ற வேண்டும் என்று கூறிய உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுதீனைக் கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ சாடினார்.
“நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அவ்வாறு செய்யாதபோது, உங்கள் அறியாமையையும் ஆணவத்தையும் சேர்த்து வெளிபடுத்தி விடுவீர்கள்.
“புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் செயல்படும் நாங்கள், இந்த அரசாங்கத்திற்கும் முந்தைய அரசாங்கத்தினருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆவணப்படுத்தாமல் வழங்கும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பங்கைப் பற்றி நினைவூட்டியுள்ளோம்.
“இந்த நேர்மையற்ற நபர்களை, ஒரு திறந்த நீதிமன்றத்தில் விசாரித்து குற்றஞ்சாட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம்,” என்று சார்லஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சட்டப்பூர்வப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்தபின்னர், எவ்வாறு நாட்டின் அமைப்பு முறை விரிசல்களில் நழுவிச் செல்கிறார்கள் என்பதை மலேசியாகினி விவரித்துள்ளது.
மலேசியாவில் குறைந்தது நான்கு மில்லியன் ஆவணமற்றத் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் 90 விழுக்காட்டினர் சட்டப்பூர்வமாக மலேசியாவிற்குள் நுழைந்தவர்கள் என்று சார்லஸ் கூறினார்
“ஹம்சா தொழிலாளர் முகவர்களுக்குப் பக்கபலமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தப் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பற்றிய தவறான தகவல்களோடு ஒரு மோசமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
“நாம் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய வேண்டுமானால், அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரேனும் ஹம்ஸாவிடம் தெரிவிக்க வேண்டும்.
“ஒரு மூத்த அமைச்சரவைப் பதவியை வகித்த போதிலும், எல்லோருக்கும் தடுப்பூசி போடும்வரை, யாரும் இங்கே பாதுகாப்பாக இல்லை என்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாமல் இருப்பது முரணாக இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைக் கைது செய்வதற்கான திட்டமிட்ட கூட்டு நடவடிக்கை தொடர்பாக, இரு தரப்பிலிருந்தும், 20-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இரண்டு தனித்தனி அறிக்கைகளில் அவரைத் தாக்கியதை அடுத்து ஹம்ஸா நேற்று கருத்து தெரிவித்தார்.
துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் சைட், முன்னாள் அமைச்சர்கள் மஸ்லீ மாலிக் மற்றும் முஜாஹிட் யூசோப் ராவா, செனட்டர் லீயு சின் தோங், நூருல் இசா அன்வர் மற்றும் சார்லஸ் உட்பட ஹம்ஸாவின் நடவடிக்கையைப் பலர் கண்டித்தனர்.
கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு முன்வரும் ஆவணமற்ற வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று முன்னர் கூறிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன் பேசுமாறு அவர்கள் ஹம்ஸாவை வலியுறுத்தினர், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மந்தை நிலையில் அடைவதற்கு உத்தரவாதம் முக்கியமானது என்றும் அவர்கள் கூறினர்.
ஹம்ஸாவின் மோசமான அறிக்கைகள் மற்றும் கேலிக்கூத்துகள், சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று சார்லஸ் இன்று கூறினார். அதற்கு பதிலாக, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் நம்பிக்கையைச் சம்பாதிக்க ஒரு வழியை அவர் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அவர்.