சைம் டார்பி பிளான்டேஷன் (எஸ்.டி.பி.) ஆஸ்திரேலிய மனித உரிமை வழக்கறிஞர் பேராசிரியர் ஜஸ்டின் நோலனை அந்நிறுவனத்தின் பங்குதாரர் மனித உரிமைகள் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துள்ளது.
மார்ச் 2021-இல் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில், இம்பாக்ட் லிமிடெட்டின் நெறிமுறை வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் பெருந்தோட்ட ஆலோசனைக் குழு, நோலன் உட்பட, வெளிநாட்டு தொழிலாளர்கள் உரிமை ஆர்வலரும் மனித உரிமை ஆராய்ச்சியாளருமான ஆண்டி ஹால் மற்றும் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் மிகப்பெரிய தொழிற்சங்கமான தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் (என்.யு.பி.டபிள்யு.) பிரதிநிதிகளும் உள்ளனர்.
“பேராசிரியர் நோலனுக்கு வணிக மற்றும் மனித உரிமைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நீதி துறையில் கற்பிக்கிறார் மற்றும் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்,” என அத்தோட்டக் குழு நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
2004-இல், நியூ சவுத் வேல்ஸ் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, நோலன் அமெரிக்காவில் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் மன்றச் செயலவையில் வணிக மற்றும் மனித உரிமைகள் திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார் என எஸ்.டி.பி. தெரிவித்தது.
அந்தக் காலகட்டத்தில், நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்குக் கார்ப்பரேட் துறையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள உத்திகள் குறித்து ஆலோசனை வழங்கினார், அத்துடன் நியாயமான தொழிலாளர் சங்கத்தை நிறுவுவதில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலியாவில் மனித உரிமைகள் மற்றும் வணிக இயக்கத்தின் முக்கியத் தலைவராகவும் ஆலோசனை நிபுணராகவும் நோலன் பல்வேறு பாத்திரங்களை வகித்துள்ளதாகவும் எஸ்.டி.பி. கூறியது.
2020-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கான நவீன அடிமைகள் நிபுணர் ஆலோசனைக் குழு
வில் அவர் நியமிக்கப்பட்டார்.
நவீன அடிமைத்தனம், வணிகம் மற்றும் மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மற்றும் கார்ப்பரேட் நெறிமுறைகள் ஆகியவற்றில் நோலனின் விரிவான அறிவையும் அனுபவத்தையும் விவரித்த, எஸ்.டி.பி. குழுவின் நிர்வாக இயக்குநர் மொஹமட் ஹெல்மி ஓத்மான் பாஷா, இந்தக் குழு தற்போது எதிர்கொண்டுவரும் பல பிரச்சினைகளுக்கு நோலன் பேருதவியாக இருப்பார் என்றார்.
2021 மே 31-ம் தேதி, நோலன் நியமிக்கப்பட்டார் என்று எஸ்.டி.பி. தெரிவித்தது.
கட்டாய உழைப்பு குறித்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) 11 குறிகாட்டிகளை ஒரு கட்டமைப்பாகப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, மலேசியா முழுவதும் தொழிலாளர் நடைமுறைகள் குறித்த இம்பாக்டின் விரிவான மதிப்பீடு ஜூன் 2021-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கை, விரிவான பரிசீலனைக்குப் பங்குதாரர் ஆலோசனைக் குழுவிடம் அனுப்பப்படும், அதன்பிறகு, எஸ்.டி.பி., இம்பாக்ட் மற்றும் பங்குதாரர் ஆலோசனைக் குழு ஆகியவை முன்மொழியப்பட்ட தீர்வுகள் குறித்து உடன்படுவர்.
“ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்படையாகவும், இப்போது மற்றும் எதிர்காலத்தில் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான வேலை மற்றும் வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்குத் தேவையான எந்தவொரு தீர்வு நடவடிக்கைகளையும் செய்ய எஸ்.டி.பி. உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா