தேசியக் கூட்டணியின் நிர்வாக அமைச்சர்களாக மாறிய, இரண்டு முன்னாள் கட்சித் தலைவர்களைப் பி.கே.ஆர். இளைஞர் அணி (ஏ.எம்.கே.) குறிவைத்து வருகிறது.
பி.கே.ஆர். இளைஞர் அணியின் இன்றைய வருடாந்திர மாநாட்டில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் அக்மல் நசீர், தனது கொள்கை உரையில், மொஹமட் அஸ்மின் அலி மற்றும் ஸூரைடா கமருட்டின் ஆகியோர் தற்போது வகித்துவரும் அமைச்சர் பதவிகளை விமர்சித்தார்.
சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக, அஸ்மின் தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டார், எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று கோரும் ஆன்லைன் மனுவை ஆதரிப்பதாக அக்மல் கூறினார்.
“பிரசாரனாவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய, தாஜுட்டினின் (எதிராக) மனுவிற்கு நெட்டிசன்களிடமிருந்து 139,000 கையெழுத்துக்கள் கிடைத்தன.
“இன்று, அஸ்மின் பதவி விலக 172,000 கையெழுத்துகளை நாம் காண்கிறோம்.
“எனவே, ஏ.எம்.கே. தலைவராகவும் ஜொகூர் பாரு வாக்காளர்களின் பிரதிநிதியாகவும், எனக்கு ஆதரவளிக்க எனது நண்பர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.
“இந்த மனு, 200,000-ஐ எட்டினால், பிரதமர் அஸ்மினை இராஜினாமா செய்யச் சொல்லத் துணிகிறாரா இல்லையா என்பதைப் பார்ப்போம்,” என்று அக்மல் கூறினார்.
இதற்கிடையில், ஸூரைடாவின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரிமா வீட்டுத் திட்டங்களை வாங்குபவர்கள் உட்பட, இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமை குறித்த கவலைகளை அக்மல் வலியுறுத்தினார்.
பி.எச். ஆட்சி காலத்திலிருந்து, ஸூரைடா அந்த இலாகாவைப் பராமரித்திருந்தாலும், கூறப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க அவர் இன்னும் தவறுகிறார் என்று அக்மல் கூறினார்.
“அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டங்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாது என்று நினைத்து பலர் முட்டாளாக்கப்படுகிறார்கள்.
“மறுபுறம், கைவிடப்பட்ட மற்றும் உருகுழைந்துள்ள பிரிமா திட்டங்கள், பல ஆண்டுகளாக முடிக்கப்படாத நிலையில் உள்ள வீடுகளுக்கு வங்கிக் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும்.
“வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டிய தேதி (இது இன்னும் தயாராக இல்லை) விருப்பப்படி மாற்றப்படுகிறது, மேலும் வீடுகளை வாங்கிய சிலர், அமைச்சரை சந்திப்பது மன உளைச்சலை மட்டுமே தருகிறது என்று புகார் கூறுகின்றனர்.
“மூன்று ஆண்டுகளாக, ஒரே அமைச்சரின் நிர்வாகத்தில் இருக்கும் ஓர் அமைச்சாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு உள்ளது, ஆனால் மலிவுவிலை வீடுகளின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை,” என்று அக்மல் கூறினார்.
இந்த வீட்டு விவகாரத்தில், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தரப்பினர் யாரேனும் இருப்பார்கள் என்று நம்பும் சிலர் தங்கள் குறைகளைக் கூறி, புகார் அளித்து வருவதை ஏ.எம்.கே. கவனித்து வருகிறது என்று அவர் கூறினார்.
அக்மலின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்று தணிந்தவுடன், சிக்கலான பிரிமா வீட்டுத்திட்டத்தை அம்பலப்படுத்த, ஏ.எம்.கே. நாடு தழுவியச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும்.
பி.கே.ஆரின் போராட்டத்தைத் தொடர, குறிப்பாக ஜிஇ15-ஐ எதிர்கொள்வதில், தயாராக இருக்க வேண்டுமென அக்மல் இளைஞர்களை வலியுறுத்தினார்.
“வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது கடுமையாக்கப்பட வேண்டும், சீர்திருத்தப் போராட்டத்திற்கு விசுவாசமாக இல்லாதவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.